Dalit Student: சாதிய ரீதியாக திட்டிய ஆசிரியர்கள்.. வகுப்பறையிலேயே தற்கொலை செய்து கொண்ட பட்டியலின மாணவன்.. நடந்தது என்ன?
சாதியை சொல்லி ஆசிரியர்கள் திட்டியதால் 15 வயது தலித் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைகள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, பட்டியலினகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை.
சமீபத்தில் கூட, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பட்டியலின சிறுமியை அவரது காதலன் கண்முன்னே மூன்று கல்லூரி மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய ஆசிரியை, மற்ற மாணவர்களை விட்டு இஸ்லாமிய மாணவனை அறைய சொன்ன சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சாதியை சொல்லி திட்டிய ஆசிரியர்கள்:
இந்த நிலையில், ராஜஸ்தானில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. சாதியை சொல்லி ஆசிரியர்கள் திட்டியதால் 15 வயது பட்டியலின மாணவன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. கோட்புட்லி நகரில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளி விடுதியில் வசித்து வந்த மாணவன், வகுப்பறை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுவனின் சாதியை இழிவுபடுத்தியதாக் கூறி, அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.
கொலை வழக்கின் கீழும் மற்றும் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம்:
இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், "இரண்டு ஆசிரியர்கள் துன்புறுத்தியதை பற்றி சிறுவன் தனது தந்தையிடம் கூறியிருக்கிறார். ஆனால், அவர்கள் மீது பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதாக பள்ளி நிர்வாகம் உறுதியளித்ததையடுத்து, குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
தற்கொலை என்றைக்கும் எதற்கும் ஓர் தீர்வல்ல. தற்கொலைக்கு காரணமான மன அழுத்தம், மனநல பிரச்சனைகள் ஆகியவை குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
இதையும் படிக்க: UP Teacher: மற்ற மாணவர்களை விட்டு இஸ்லாமிய மாணவனை அடிக்க சொன்னது ஏன்? உத்தரப் பிரதேச ஆசிரியை பரபரப்பு விளக்கம்