Mahua Moitra : "பாஸ்வேர்ட் கொடுத்ததும், பரிசை பெற்றதும் உண்மை" லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் திருப்பம்.. மொய்த்ரா பகீர்
தனது மக்களவை உறுப்பினர் அக்கவுண்டை தொழிலதிபர் தர்ஷன் பயன்படுத்த அனுமதித்ததாக மொய்த்ரா ஒப்பு கொண்டுள்ளார்.
பாஜகவுக்கு எதிராகவும் அதானி குழுமம் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் தொடர் பரபரப்பை கிளப்பி வருகிறது. மொய்த்ரா, தன்னிடம் லஞ்சம் பெற்று கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியதாக மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி கடிதம் எழுதினார்.
மொய்த்ராவுக்கு எதிராக முன்னாள் காதலர் தந்த வாக்குமூலம்:
இந்த விவகாரத்தில் மொய்த்ராவுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பான ஆதாரங்களை நிஷிகாந்த் துபேவிடம் அளித்தவர் ஜெய் ஆனந்த் தேஹாத்ராய். இவர் வேறு யாரும் அல்ல, மொய்த்ராவின் முன்னாள் காதலர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரா இவர், மொய்த்ராவுக்கு எதிராக சிபியிடம் புகார் அளித்தார்.
இதை தொடர்ந்து நடந்த நெறிமுறைகள் குழு கூட்டத்தில், நிஷிகாந்த் துபேவும் ஆனந்த் தேஹாத்ராயும் வாக்குமூலம் அளித்தனர். தன் தரப்பு நியாயத்தை விளக்க வரும் 31ஆம் தேதி ஆஜராகி நெறிமுகளை குழு கூட்டத்தில் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என மொய்த்ரா சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தனது தொகுதியில் தனக்கு வேலை இருப்பதாக கூறி, அவர் கூடுதல் அவகாசம் கேட்ட நிலையில், நவம்பர் 2ஆம் தேதி ஆஜராகும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளார்.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த மொய்த்ரா, தற்போது பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். தொழிலதிபர் தர்ஷனிடம் பரிசுகளை பெற்றது உண்மைதான் ஆனால், ஒரு ஸ்கார்ஃப் துண்டு, லிப்ஸ்டிக்குகள் உள்ளிட்ட ஒப்பனை பொருட்கள் தவிர வேறு எந்த பொருளையும் பரிசாக வாங்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
"தொழிலதிபரிடம் பரிசை பெற்றது உண்மை"
அதுமட்டும் இன்றி, தனது மக்களவை உறுப்பினர் அக்கவுண்டை தொழிலதிபர் தர்ஷன் பயன்படுத்த அனுமதித்ததாகவும் ஒப்பு கொண்டுள்ளார். இந்த அக்கவுண்ட் மூலம்தான், நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய கேள்விகளை தர்ஷன், மொய்த்ராவுக்கு அனுப்பியுள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில், மொய்த்ரா, இந்த பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார். மற்ற எந்த விதமான லஞ்சத்தையும் தான் பெறவில்லை என்றும் தொழிலதிபர் தர்ஷனை குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுவதற்கு அவர் (முன்னாள் காதலர் தேஹாத்ராய்)
தகுதியற்றவர். எங்களின் செல்ல நாய் ஹென்றி, யாரிடம் இருக்க வேண்டும் என்பதற்காக சண்டையிட்டு கொண்டிருந்தோம். இதற்காகதான், அவர் எனக்கு எதிராக புகார் அளித்தார்" என்றார்.
தொழிலதிபர் தர்ஷனிடம் பாஸ்வேர்ட் கொடுத்தது ஏன் என விளக்கம் அளித்த மொய்த்ரா, "எனது தொகுதி தொலைதூரத்தில் இருந்ததால், அங்கிருந்து பணிபுரிந்த காரணத்தால் மற்றவர்களுடனும் பாஸ்வேர்ட் பகிர்ந்து கொண்டேன். ஆனால், ஒவ்வொரு முறையும் OTP வரும். எனது குழுவினர், கேள்விகளை அனுப்புவார்கள். அரசாங்க மற்றும் நாடாளுமன்ற வலைத்தளங்களை இயக்கும் தேசிய தகவல் மையம், பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளக்கூடாது என சொல்லவில்லை" என்றார்.
இதையும் படிக்க: Rajasthan Election: ராஜஸ்தானில் இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பாரா வசுந்தரா ராஜே? பாஜக செம்ம ஸ்கெட்ச்!