Rajasthan Election: ராஜஸ்தானில் இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பாரா வசுந்தரா ராஜே? பாஜக செம்ம ஸ்கெட்ச்!
Rajasthan Election 2023: தேர்தல் விவகாரங்களில் இருந்து வசுந்தரா ராஜே ஓரங்கட்டப்பட்டு வந்ததாக கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது. அதற்கு ஏற்றார்போல், பா.ஜ.க. அறிவித்த வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை.
Rajasthan Assembly Election 2023: பாஜக அதிக கவனம் செலுத்தும் மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தான் உள்ளது. 25 மக்களவை தொகுதிகள் அங்கிருப்பதால், மத்தியில் ஆட்சி அமைக்க இந்த தொகுதிகளில் வெற்றிபெறுவது அவசியம். கடந்த 2014ஆம் ஆண்டிலும் சரி, 2019ஆம் ஆண்டிலும் சரி, ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியிருந்தது.
ராஜஸ்தான் அரசியல் சூழல்:
சட்டப்பேரவை தேர்தல்களை பொறுத்தவரையில், கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சி அங்கு ஆட்சியை தக்க வைத்ததாக சரித்திரம் இல்லை. ஆனால், இந்த முறை வரலாற்றை மாற்றி ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதேபோல, ஆட்சியை பிடிக்க பாஜகவும் அதிரடி காட்டி வருகிறது. ஆனால், பாஜகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் தேசிய தலைவர்களுக்கு தலைவலியாக மாறியுள்ளது. குறிப்பாக, ராஜஸ்தானில் பாஜக முகமாக இருந்த வந்த வசுந்தரா ராஜேவை ஓரங்கட்ட கட்சி மேலிடம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
வசுந்தரா ராஜேவுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் தொடக்கத்தில் இருந்தே, ஏழாம் பொருத்தம் என கூறப்பட்டு வந்தது. அதற்கு ஏற்றார்போல் ராஜஸ்தான் பாஜகவில் பல அதிரடி அரசியல் நிகழ்வுகள் அரங்கேறின. குறிப்பாக, மத்திய பாஜக தலைமைக்கு நெருக்கமானவராக கருதப்பட்ட மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை ராஜஸ்தான் பாஜக தலைவராக நியமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பாரா வசுந்தரா ராஜே?
ஆனால், அதற்கு வசுந்தரா ராஜே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஜாட் சமூகத்தை சேர்ந்த ஒருவரை தலைவராக நியமிக்கவில்லை என்றால், பாஜகவை அச்சமூக மக்கள் ஒதிக்கிவிடுவார்கள் என காரணம் சொன்னார். அப்போதில் இருந்து இப்போது வரை இருவரும் இருவருக்கும் மத்தியில் சமூகமான உறவு இருந்துவிடவில்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான், ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானது. ஆனால், தேர்தல் விவகாரங்களில் இருந்து வசுந்தரா ராஜே ஓரங்கட்டப்பட்டு வந்ததாக கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது. அதற்கு ஏற்றார் போல், பாஜக அறிவித்த வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை.
இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வசுந்தரா ராஜேவின் பெயர் இடம்பெற்றுள்ளது. பல்வேறு சமூக மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இருப்பதால் அவருக்கு முக்கியத்துவம் அளிக்க கட்சியின் தேர்தல் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 83 பேர் கொண்ட இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலில் வசுந்தரா ராஜேவின் ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
குவாலியரை ஆட்சி செய்து வந்த சிந்தியா அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் வசுந்தரா ராஜே. இவரது தாயார் விஜய ராஜே சிந்தியா பாரதிய ஜனசங்கத்திலும் (BJS) பின்னர் பாஜகவிலும் முக்கிய தலைவராக திகழ்ந்தவர். இவரது சகோதரர் மாதவராவ் சிந்தியா, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர்.