Top 10 News: ”நிர்பந்திக்கும் ஒன்றிய அரசு” அமைச்சர் குற்றச்சாட்டு, அல்லு அர்ஜுனுக்கு நெருக்கடி - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
தமிழ்நாடு நிராகரிப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி
2025 குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக வதந்தி. அணிவகுப்பில் 15 மாநில ஊர்திகள் மட்டுமே அனுமதிக்கப்படும், ஒவ்வொரு மாநிலமும் சுழற்சி முறையில் மட்டுமே பங்கேற்க முடியும் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம். 2024ல் பங்கேற்ற தமிழ்நாடு அலங்கார ஊர்தி அடுத்ததாக 2026ல் பங்கேற்கும். அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்பந்திக்கும் ஒன்றிய அரசு - அமைச்சர் அன்பில் மகேஷ்
மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்பந்தம் செய்கிறது. மும்மொழி கொள்கையை ஏற்றால் பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிப்பதாக விவாதத்தில் ஈடுபடுகின்றனர் -அன்பில் மகேஸ், அமைச்சர்
மருத்துவக் கழிவுகள் அகற்றும் பணி தீவிரம்
கேரளாவிலிருந்து கொண்டுவந்து நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. மருத்துவக்கழிவுகளை எடுத்துச்செல்ல 5 லாரிகள் வந்துள்ளன. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.
திருவண்ணாமலையில் கோர விபத்து
குடும்பத்துடன் திருவண்ணாமலை சென்றுவிட்டு மன்னார்குடிக்கு வந்து கொண்டிருந்த ரவிச்சந்திரன் என்பவரது கார் காளாஞ்சிமேடு சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்து. ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. மேலும் 5 பேர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அல்லு அர்ஜுனுக்கு அதிகரிக்கும் நெருக்கடி
புஷ்பா 2 படத்தை பார்க்க வந்த ரசிகையின் மரணத்திற்கு அல்லு அர்ஜுனே காரணம் என்பதில் ஐதராபாத் போலீசார் உறுதி. குற்றச்சாட்டுகளை மறுத்த நிலையில், திரையரங்கில் இருந்து அல்லு அர்ஜுனை போலீசார் அழைத்து வந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு.
நெருங்கும் கிறிஸ்துமஸ்.. களைகட்டும் புதுச்சேரி!
நட்சத்திரங்கள், சாண்டாகிளாஸ் பொம்மைகள், குடில் மற்றும் அதற்குத் தேவையான பொம்மைகள் விற்பனை தீவிரமடைந்துள்ளது. சீனா, இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள பொம்மைகள், வண்ண விளக்குகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மகனை கொலை செய்த கொடூர தந்தை
அமெரிக்காவில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையின் தலையை வெட்டி கொலை செய்த கொடூர தந்தை ஆண்ட்ரே டெம்ஸ்கி (28) கைது! மனைவி மற்றும் மாமியாரை தாக்கியதால் இருவரும் வீட்டிற்கு வெளியே வந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதற்கிடையில் வீட்டில் இருந்த குழந்தையை கொலை செய்துள்ளார் ஆண்ட்ரே.
எலான் மஸ்கிற்கு அதிபர் பதவியா?
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு, டிரம்ப் அதிபர் பதவியை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவை வெறும் வதந்திகள் மட்டுமே என டிரம்ப் விளக்கமளித்துள்ளார்.
ஸ்மிருதி மந்தனாவின் புதிய மைல்கல்
ஓராண்டில் அதிக ரன்கள் (1,602) விளாசிய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், 91 ரன்கள் விளாசியதன் மூலம் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். முன்னதாக, 2018,2022 ஆகிய ஆண்டுகளிலும் ஸ்மிருதியே இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார்.
பலன் கொடுக்காத க்ளாசனின் அதிரடி
சொந்த மண்ணில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில், தென்னாப்பிரிக்க வீரர் க்ளாசன் சராசரியாக 88 ரன்கள் விளாசினார். இருப்பினும், அந்த அணி 0-3 என Whitewash ஆகியுள்ளது. நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில், 36 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி.