தெலங்கானா அரசுக்கு ரூ.3,800 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்! ஏன் தெரியுமா?
மறுசீரமைப்புத் திட்டங்கள் உடனடியாக மாநிலம் முழுவதும் காலவரையறையில் செயல்படுத்தப்பட வேண்டும், இல்லையென்றால், கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டிய நிலை வரும் என்று பசுமைக் தீர்ப்பாயம் எச்சரித்தது.
திட மற்றும் திரவ கழிவுகளை சுத்திகரிக்க தவறிய தெலங்கானா அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.3,800 கோடி அபராதம் விதித்துள்ளது.
தெலங்கானாவிற்கு அபராதம்
என்ஜிடி தலைவர் நீதிபதி ஏ கே கோயல் தலைமையிலான பெஞ்ச், தென் மாநிலத்தில் திட மற்றும் திரவக் கழிவுகளை நிர்வகிப்பதில் பெரும் இடைவெளிகள் இருப்பதாகக் குறிப்பிட்டது. நீதிபதி அருண் குமார் தியாகி மற்றும் நிபுணர் உறுப்பினர்கள் ஏ செந்தில் வேல் மற்றும் அஃப்ரோஸ் அகமது ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கடந்த காலங்களில் இதனை செயதிருக வேண்டியது அரசின் பொறுப்பு என்றும் அதனை மீறியவர்கள் "Polluter Pays(மாசுபடுத்துபவர் செலுத்தவேண்டும்)" என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கணக்கிட வேண்டும் என்று குறிப்பிட்டது. அதாவது இதனை செய்ய தவறிய அரசாங்கமே இதனை மாசுபடுத்தியதாக கருதப்படும் என்றும், அவர்களே அதற்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் கூறினர். மேலும் அந்த அபராதப்பணம் சுற்றுச்சூழலை மீட்டெடுக்க பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். தூய்மையான காற்று, நீர், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை வழங்குவது நல்லாட்சிக்கான முன்னுரிமையாக இருக்க வேண்டும். மாசு இல்லாத சூழலை வழங்குவதற்கான பொறுப்பு அரசிடம் உள்ளது என்பதை மாநிலம் தவிர்க்க முடியாது என்று பெஞ்ச் கூறியது.
ரூ. 3,800 கோடி
தெலங்கானா செலுத்த வேண்டிய மொத்த சுற்றுச்சூழல் இழப்பீட்டைக் கணக்கிட்டு, திரவக் கழிவுகள் அல்லது கழிவுநீரைச் சுத்திகரிப்பதில் உள்ள இடைவெளிக்கான தொகை ரூ. 3,648 கோடி என்றும், திடக்கழிவுகளை அறிவியல் பூர்வமாக நிர்வகிக்கத் தவறியதற்கான இழப்பீடு ரூ.177 கோடி என்றும் பெஞ்ச் கூறியது. “மொத்த இழப்பீடு ரூ. 3,825 கோடி அல்லது, ரூ. 3,800 கோடியை, தெலங்கானா மாநிலம் இரண்டு மாதங்களுக்குள் தனி ரிங் வேலியிடப்பட்ட கணக்கில் டெபாசிட் செய்யலாம். இந்த பணம் மறுசீரமைப்பு நடவைடக்கைகளுக்கு தலைமைச் செயலாளரின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படும்,” என்று பெஞ்ச் கூறியது.
மறுசீரமைப்புப் பணி
மேலும், கழிவுநீர் மேலாண்மையை மறுசீரமைப்பதில் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டு அமைப்புகளை அமைத்தல், அமைப்புகளை மேம்படுத்துதல் அல்லது தற்போதுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகளின் செயல்பாடுகளை மேம்படுத்துதல், அவற்றின் முழு திறன்களையும் பயன்படுத்துவதை உறுதி செய்தல், முறையான மல கழிவுநீர் மற்றும் கசடு மேலாண்மை பொறிமுறையை உருவாக்குதல் உள்ளிட்ட தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்தல் ஆகியவை அடங்கும்.
இணங்கவேண்டி எச்சரிக்கை
திடக்கழிவு மேலாண்மைக்காக, செயல்படுத்தும் திட்டத்தில், தேவையான கழிவுகளை பதப்படுத்தும் ஆலைகளை அமைப்பது மற்றும் வெளியேறிய இடங்களை சரிசெய்வது ஆகியவை அடங்கும் என்று பெஞ்ச் கூறியது. மறுசீரமைப்புத் திட்டங்கள் உடனடியாக மாநிலம் முழுவதும் காலவரையறையில் செயல்படுத்தப்பட வேண்டும், மேலும் மீறல்கள் தொடர்ந்தால், கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டிய நிலை வரும் என்று பசுமைக் தீர்ப்பாயம் மேலும் எச்சரித்தது. இதற்கு இணங்குவது தலைமைச் செயலாளரின் பொறுப்பாகும் என்று கூறிய தீர்ப்பாயம், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் முன்னேற்ற அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறு அவருக்கு உத்தரவிட்டது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016 மற்றும் பிற சுற்றுச்சூழல் அம்சங்களுடன் இணங்குவதை பசுமை தீர்ப்பாயம் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.