Lashkar-e-Taiba | பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐயும் ட்ரெயின் செய்தார்கள் - பரபர வாக்குமூலம் அளித்த லஷ்கர் தீவிரவாதி
காஷ்மீரின் உரி செக்டாரில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 19 வயதே நிரம்பிய தீவிரவாதி ஒருவர் பிடிபட்டார்.
காஷ்மீரின் உரி செக்டாரில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 19 வயதே நிரம்பிய தீவிரவாதி ஒருவர் பிடிபட்டார். அலி பாபர் பத்ரா என்ற அந்த இளைஞர் தன்னை எப்படி பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு தீவிரவாத செயல்களுக்குத் தயார்படுத்தியது என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியிலிருந்து:
நான் அலி பாபர் பத்ரா. எனது நாடு பாகிஸ்தான். என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவருக்கு வைத்தியம் பார்க்க எனக்குப் பணம் தேவைப்பட்டது. அப்போதுதான் நான் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் சேர்ந்தேன். அங்கே சேர்ந்தவுடன் எனக்கு ரூ.20,000 கொடுத்தனர். நான் அதை குடும்பத்தில் கொடுத்தேன். பின்னர் என்னை ஐஎஸ்ஐ அதாவது பாகிஸ்தானின் உளவு அமைப்பிடம் ஒப்படைத்துவிட்டனர். எனக்கு ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி அளித்தது. இந்தப் பயிற்சிக்குப் பின்னர் என்னை காஷ்மீர் அனுப்பவதாகக் கூறினார்கள். நான் காஷ்மீருக்குச் சென்று திரும்பியவுடன் எனது குடும்பத்துக்கு மேலும் ரூ.30,000 அளிக்கப்படும் என்றும் கூறினர். காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பட்டான் பகுதியில் தங்கச் சொன்னார்கள். அங்கே என்னை லஷ்கர் இயக்கத்தினர் தொடர்பு கொண்டு ஆயுதமும் திட்டமும் கூறுவார்கள். அதன்படி செய்து திரும்பியவுடன் குடும்பத்துக்கு மேலும் ரூ.30,000 கிடைக்கும் என்பதால் ஒப்புக் கொண்டேன்.
உண்மையில் ஜிஹாத் தேவையற்றது. பாகிஸ்தான் இளைஞர்களே இதைப் புரிந்து கொள்ளுங்கள்.
பாகிஸ்தானில் பயிற்சியளித்தபோது இந்தியாவின் காஷ்மீரில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறினார்கள். ஆனால், இங்கு வந்துபார்த்தபோது அப்படியேதும் தென்படவில்லை. இங்கே முஸ்லிம் மக்கள் மகிழ்ச்சியாக, பாதுகாப்பாக இருக்கின்றனர். நான் சரணடைந்துவிட்டதால் ராணுவத்தினரோ, போலீஸாரோ என்னை அடிக்கவில்லை. பாகிஸ்தான் இளைஞர்கள் ஜிஹாத் எனக் கூறிக்கொண்டு இந்தியாவுக்கு எதிராக செயல்பட வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த நபர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.
தீவிரவாதி குறித்து ராணுவத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உரி செக்டார் வழியாக 6 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அடிக் உர் ரஹ்மான் அல்லது காரி அனாஸ் என்ற பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் அட்டாக் மாவட்டம் பிண்டி கிராமத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் கைதாகியுள்ளார். இவருக்கு மொத்தம் ரூ.50,000 கொடுப்பதாகக் கூறி மூளைச் சலவை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்
2016ல் ஊடுருவிய அதே பாதை:
பாகிஸ்தானில் இருந்து உரி செக்டாருக்கு ஊடுருவ சவாய் நலா முகாமில் இருந்து ஹலான் சுமாலிக்கு வந்து அங்கிருந்து சலாமாபாத் நலா வழியாக உரியில் நுழைய தீவிரவாதிகள் முற்பட்டனர் என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது. மேலும், கடந்த 2016 ஆம் ஆண்டு இதே பாதையில் ஊடுருவி தான் உரியில் உள்ள பாதுகாப்பு அரணை தீவிரவாதிகள் தாக்கினர் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஏழ்மையைப் பயன்படுத்தும் தீவிரவாதிகள்:
அலி பாபரின் தந்தை இறந்துவிட தாய் மற்றும் சகோதரியுடன் அவர் வசித்து வந்துள்ளார். வறுமையின் காரணமாக 7 ஆம் வகுப்புடனேயே கல்வியை நிறுத்திவிட்டார். அதன் பின்னர் கிடைத்த வேலைகளை எல்லாம் பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார். அண்மையில் அவரது தாய்க்கு உடல்நலன் குன்றவே அவரது சிகிச்சைக்குப் பணம் தேவைப்பட்டுள்ளது. பணத்துக்காக மட்டுமே அவர் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார் என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள சிறுவர்கள் பலரும் இப்படியான ஏழ்மைச் சூழ்நிலையில் தான் தீவிரவாதிகளால் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள் என அ வர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது