பார்ட்டியில் சாப்ட்வேர் இன்ஜினியருக்கு நேர்ந்த கொடூரம்.. நண்பர்கள் செய்த செயலால் அதிர்ச்சி!
ஹைதராபாத்தில் அடுத்தடுத்து நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்ட்டியில் நண்பர்கள் இணைந்து சாப்ட்வேர் இன்ஜினியரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
தெலங்கானா மாநிலத்தில் அடுத்தடுத்து நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவேறு சம்பவங்களில் மென்பொருள் பொறியாளர் ஒருவரும் திருமணமான பெண் ஒருவரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி:
ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் வைத்து மென்பொருள் பொறியாளரை அவரது இரண்டு நண்பர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியுள்ளனர். மற்றொரு பெண்ணை அவர் பயணம் செய்த பேருந்தின் ஓட்டுநரே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
தனக்கு புதிய வேலை கிடைத்ததாகவும் அதை கொண்டாடுவதற்காக தனது சிறு வயது நண்பரான கௌதம் ரெட்டி மற்றும் இருவருக்கும் பொதுவான மற்றொரு நண்பரையும் பாருக்கு அழைத்ததாகவும் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வனஸ்தலிபுரம் காவல் ஆய்வாளர் டி. ஜலேந்தர் ரெட்டி கூறுகையில், "அவர்கள் பாருக்கு சென்றனர். ரெட்டியும் அவருடைய நண்பரும் குடிபோதையில் இருந்துள்ளனர். இருவரும் அவரை ஹோட்டலில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினர். பாதிக்கப்பட்ட பெண்ணும் ரெட்டியும் 2ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஒன்றாக படித்துள்ளனர்" என்றார்.
பேருந்து ஓட்டுநர் வெறிச்செயல்: மற்றொரு சம்பவத்தில், நிர்மலில் இருந்து பிரகாசம் மாவட்டத்திற்கு திருமணமான பெண் தனியார் பேருந்தில் சென்றுள்ளார். இன்று அதிகாலை, வாயில் துணியை வைத்து அடைத்து ஓட்டுநர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசாரிடம் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உஸ்மானியா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்தர், "பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் கொடுத்ததை அறிந்த டிரைவர் கிருஷ்ணா அங்கிருந்து ஓடிவிட்டார். ஹைதராபாத் நகருக்குள் நுழையும் போது தர்னாகா அருகே குறிப்பிட்டை பேருந்தை மறித்து, பேருந்தின் மற்ற ஓட்டுநரான சேஷய்யாவை கைது செய்தோம். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த அறிக்கைக்கு வலுச்சேர்க்கும் விதமாக ஐநா தலைவர் கடந்தாண்டு அதிர்ச்சி தரவை பகிர்ந்திருந்தார்.
அதாவது, ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார் என ஐநா செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.