இனி 10 மணி நேர வேலை! தெலங்கானாவில் அமலுக்கு வந்த புதிய விதிமுறை.. கொந்தளிக்கும் ஊழியர்கள்
தெலுங்கானாவில் அனைத்து வணிக நிறுவனங்களிலும் (கடைகள் தவிர்த்து), ஊழியர்கள் தினமும் 10 மணி நேரம் வரை வேலை செய்ய அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஆந்திர மாநிலத்தை தொடர்ந்து தெலுங்கானா அரசு, மாநிலத்தில் வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய வேலை நேர ஒழுங்குமுறை அறிமுகப்படுத்தியுள்ளது.
10 மணி நேரம் வேலை
தெலுங்கானாவில் அனைத்து வணிக நிறுவனங்களிலும் (கடைகள் தவிர்த்து), ஊழியர்கள் தினமும் 10 மணி நேரம் வரை வேலை செய்ய அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வாரத்திற்கு மொத்த வேலை நேரம் 48 மணி நேரத்தை தாண்டக் கூடாது என்று அரசு சார்பில் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கூடுதல் நேர வேலைக்கு ஊதியம்
மேலும் 48 மணி நேரத்திற்கு மேலாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு, கட்டாயமாக கூடுதல் நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
ஓய்வு கட்டாயம்
ஒரு ஊழியர் ஒரே நாளில் 6 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்தால், குறைந்தது 30 நிமிட ஓய்வு நேரம் வழங்கப்பட வேண்டும். மேலும், எந்த சூழ்நிலையிலும், கூடுதல் நேரம் உட்பட, ஒரு நாளில் 12 மணி நேரத்தை தாண்டக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகள் படி, ஒரு காலாண்டிற்கு (மூன்று மாதத்திற்கு) கூடுதல் நேர வேலை 144 மணி நேரத்திற்குள் இருக்க வேண்டும் என்பதையும் அரசு வலியுறுத்தியுள்ளது.
வேலை நேர விவாதம்:
இந்த வேலை நேர விவாதம் தேசிய அளவில் கடந்த சில மாதங்களாகவே ஆனது. மகிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா, "வேலையின் அளவை விட தரமே முக்கியம்" என்று கருத்து தெரிவித்தார்.
மறுபுறம், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் எல்&டி தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன் ஆகியோர், நீண்ட வேலை நேரத்துக்கு ஆதரவாக கருத்து கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் அதிக நேர வேலை-வாழ்க்கை சமநிலையை பாதிக்கும் என விமர்சனம் செய்திருந்தனர்.
தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில்
இதேபோல், ஏப்ரல் 2023-ல், தமிழக சட்டசபையில் 'தொழிற்சாலை சட்ட திருத்தம் 2023' நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான வேலை நேரம் 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது.
ஆனால், வாரத்தில் நான்கு நாட்கள் வேலை செய்து, மூன்று நாட்கள் விடுப்பு பெறும் முறையில், மொத்த வார வேலை நேரத்தில் எந்த மாற்றமும் இருக்காது என தமிழக அரசு உறுதியளித்தது.






















