News headlines: அம்ரிந்தர் சிங் - அமித்ஷா சந்திப்பு, பெங்களூர் அணி வெற்றி... மேலும் சில முக்கியச் செய்திகள்..!
News Headlines Today in Tamil: இன்றைய தினத்தின் காலையில் அறிய வேண்டிய பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே காணலாம்.
Tamil News Headlines Today:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களுர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சேலம் மாவட்டத்தில் இன்று 526 மையங்களில் பொதுமக்களுக்கு கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட உள்ளன.
பள்ளிகளில், பிரதமரின் ஊட்டச்சத்துக்கான தேசிய திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்துக்கு 2021-22ம் ஆண்டு முதல் 2025-26ம் ஆண்டு வரை, மத்திய அரசு ரூ.54 ஆயிரத்து 061.73 கோடியும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ரூ.31 ஆயிரத்து 733.17 கோடியும் செலவு செய்யும். உணவு தானியங்களுக்கான கூடுதல் செலவான ரூ.45 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஏற்க உள்ளது. ஆகையால் இத்திட்டத்துக்கான பட்ஜெட் மதிப்பு ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்து 794.90 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி திருக்கோயில்களின் இருப்பில் உள்ள பலமாற்று பொன் இனங்களை உருக்கி சுத்த தங்க கட்டிகளாக பெற்று வங்கியில் முதலீடு செய்து, திருக்கோயில்களின் வளர்ச்சி பணிகளுக்கு உபயோகப்படுத்தும் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி, 1 லட்சத்து 51 ஆயிரத்து 678 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,624 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 189 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 24 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,550 ஆக உயர்ந்துள்ளது.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங் நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். காங்கிரஸ் தலைமையின் உத்தரவின் பேரில் இரண்டு வாரத்துக்கு முன்பு அம்ரிந்தர் சிங் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கத்து.
Punjab Political Crisis: அமித்ஷா வீட்டில் அம்ரிந்தர் சிங்! - பாஜகவில் இணைவது கிட்டத்தட்ட உறுதியானது!
குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறையினர் இடையே அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்க நாடு முழுவதும் அறிவியல் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.
பாரத ஸ்டேட் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் 1.10.2021 முதல் 10.10.2021 வரை தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.