Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல்,சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிக அளவாக கோவை மாவட்டத்தில் 2,319 பேருக்கு தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 1,405 பேரும், சென்னையில் 1, 345 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 913 பேரும், சேலத்தில் 957 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 726 பேரும், தஞ்சாவூரில் 685 பேரும் கொரோனா கிருமித் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்
தமிழகத்தில் 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்தார்.
தமிழகத்தில் 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தலைமை செயலாளர் உத்தரவு..!
‘அனைத்துத் தரப்பினரும் வழிபடும் கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெறுகிற கிராமக் கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம்’ என விதிகளில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் விழுப்புரம் M.P ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். 2019 ஆகஸ்டில் உத்தரப் பிரதேச தலைமை செயலாளராக அவர் ஓய்வு பெற்றார். தேர்தல் ஆணையத்தில் இணைவதற்கு முன்னதாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கண்காணிப்பு குழுவின் உறுப்பினராக உத்தரப் பிரதேசத்தில் அவர் பணியாற்றினார்.
இந்த நிதியாண்டில் 3வது தவணையாக 17 மாநிலங்களுக்கு, மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை ரூ. 9,871 கோடி வழங்கியுள்ளது.தமிழகத்துக்கு இந்த மாதத்தில் 3வது தவணையாக ரூ.183.67 கோடியும், இந்த நிதியாண்டின் கடந்த 3 மாதத்தில் மொத்தமாக ரூ.551.01 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன சட்டத்தின் 275வது பிரிவின் கீழ், மாநிலங்களுக்கு பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு வழங்கி வருகிறது. 2021-22ம் நிதியாண்டில் 17 மாநிலங்களுக்கு பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ. 1,18,452 கோடி வழங்க 15வது நிதி ஆணையம் பரிந்துரை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கும் என பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார். சென்னை வாலாஜா சாலை ஓமந்தூரார் அரசினர் தொட்டம், கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறுகிறது. பேரவை நிகழ்வுகள் தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. வரும் ஜூலை மாதத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரும் 14ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவராக வைத்திலிங்கம், கொறாடாவாக பொள்ளாச்சி ஜெயராமன் அல்லது மனோஜ் பாண்டியன் தேர்வாக வாய்ப்பு உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா, நேற்று பாஜக கட்சியில் இணைந்தார். உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், இந்த இணைப்பு பேசும் பொருளாகி உள்ளது.
COVID-19 Vaccine : ‛தயக்கமல்ல தட்டுப்பாடே காரணம்’ தடுப்பூசி குறித்து பிரதீப் கவுர் கருத்து!