PTR On GST Council Meet : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன? தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்..!
இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கூட்டத்தில் என்ன ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளித்தார்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தலைமையில், டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் மீது வரி விகிதங்களை குறைப்பது மற்றும் ஏற்றுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி இருந்தது.
48ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்:
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதியன்று காணொலி காட்சி வாயிலாக ஜிஎஸ்டி கவுன்சிலின் 48வது கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி பற்றியும், பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு குறித்தும் விவாதிக்கப்படும் என பட்டியலிடப்பட்டிருந்தன. ஆனால், கூட்டதில் போதிய நேரம் இல்லாததால் அவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கூட்டத்தில் என்ன ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளித்தார்.
ஜிஎஸ்டி கூட்டம் மதுரையில் நடத்தப்படாததற்கு விளக்கம் அளித்த பழனிவேல் தியாகராஜன், "மதுரைக்கு இத்தனை மாநில அமைச்சர்கள், மத்திய துறை செயலாளர்கள் ஆகியோர் வரும் சூழலில் முறையான விருந்தோம்பல் அளிக்க நேரம் இல்லை. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை டெல்லியில் நடத்திவிட்டு அடுத்த கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டும் என கேட்டேன். அதை ஏற்று கொண்டு டெல்லியில் நடத்தியுள்ளார்கள்" என்றார்.
ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவிக்க கோரி கூட்டத்தில் வலியுறுத்தியதாக கூறிய அவர், "2020 - 21 மற்றும் 2021 - 22 ஆண்டுகளுக்கான நிலுவை தொகையை விடுவிக்க தணிக்கை அறிக்கைக்காக காத்திருந்தோம். தற்போது, தணிக்கை அறிக்கை வந்துவிட்டது.
நிலுவை தொகை எப்போது அளிக்கப்படும்?
அதை கொடுப்பதா? இல்லையா? என்ற பேச்சுகள் எழுந்தது. ஆனால், எதற்கு எல்லாம் தணிக்கை வந்துவிட்டதோ அதற்கு எல்லாம் கடன் அனுப்பப்பட்டுவிட்டது என மத்திய நிதியமைச்சர் இன்று கூறினார். அதன் அடிப்படையில், 2020 - 21 ஆண்டுக்கான நிலுவை தொகை சுமார் 4,000 கோடி ரூபாய் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. 2021 - 22 மற்றும் 2022 - 23 ஆண்டுகளுக்கான நிலுவை தொகை வர வேண்டும்" என்றார்.
"ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மாநில அளவில் இருக்க வேண்டுமா, மத்திய அளவில் இருக்க வேண்டுமா? அதன் உறுப்பினர்களாக யார் இருக்க வேண்டும் என விவாதம் நடந்தது. அதற்கு கமிட்டி சமர்பித்த அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கைக்கு சுமார் 12 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தது" என்றார்.
நிலக்கரி உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் செஸ் வரி விலக்கை நீட்டிப்பது, உள்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு இந்திய மற்றும் வெளிநாட்டு கப்பல் வரிகளுக்கு இடையே வரி சமநிலையை கொண்டு வருதல், பென்சில் ஷார்பனர்கள் மற்றும் தினசரி பயன்படுத்தப்படும் சுகாதார பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.