Freedom Of Speech: எம்பி., எம்.எல்.ஏ.,க்களின் பேச்சுரிமைக்கு கட்டுப்பாடா? - பரபரப்பான தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம்!
மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமைக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.
மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமைக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.
நடந்தது என்ன?
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் உத்திரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் நொய்டாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் காரை வழிமறித்த கொள்ளை கும்பல், அதிலிருந்த இருபெண்களை வாகனத்தில் இருந்து வெளியே இழுத்து பாலியல் வன்கொடுமை செய்தனர். அப்போது அம்மாநிலத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தது. இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அந்த கட்சியின் மூத்த தலைவரும், கேபினட் அமைச்சருமான அசம் கான், இது உத்தரபிரதேச அரசுக்கு எதிரான அரசியல் சதி என குறிப்பிட்டார்.
இதனை எதிர்த்து இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அசம் கான் உச்சநீதிமன்றத்தில் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். அதேசமயம் இந்த வழக்கு அரசின் கடமை, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம், அமைச்சர் போன்ற ஒரு உயர் பதவியில் இருப்பவர்கள், ஒரு குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களிடத்தில் விசாரணையின் நேர்மை குறித்து அவநம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை வெளியிடலாமா என்று கேள்வியை எழுப்பியது. அதேபோல் மக்கள் பிரதிநிதிகளின் பேச்சு சுதந்திரத்தின் அடிப்படை உரிமைக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா என்பது குறித்து விசாரித்து தீர்ப்பளிக்க அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைத்தது.
இதற்கிடையில் இந்த வழக்கை நீதிபதி எஸ்.ஏ.நசீர், நீதிபதிகள் பி.ஆர்.கவை, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது பொதுப் பதவியில் இருப்பவர்கள் சுயக்கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றும், அவர்கள் இழிவான கருத்துக்களை வெளியிடக்கூடாது என்றும் எழுதப்படாத விதி இருப்பதாகக் தெரிவித்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது பேச்சுரிமைக்கு எதிராக கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்றும், மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமைக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்றும் அரசியல் சாசன அமர்வின் 5 நீதிபதிகளில் 4 பேர் ஒருமித்த கருத்தை தெரிவித்தனர்.