Same Gender Marriage: 14 கோடி பேரின் எதிர்பார்ப்பு - தன்பாலின திருமணத்திற்கு இந்தியாவில் அங்கீகாரம் கிடைக்குமா? - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
Same Gender Marriage: இந்தியாவில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என கோரிய மனுக்கள் மீது, உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.
Same Gender Marriage: ஆண் மற்றொரு ஆணையும், பெண் மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்வதை, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க கோரிய மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.
தன்பாலின திருமணம்:
தன்பாலின தம்பதி மற்றும் சில அமைப்புகளின் சார்பில், இந்தியாவில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என 21 மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பான விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரண நடத்தி வருகிறது.
மனுதாரர் தரப்பு வாதம்:
விசாரணையின் போது, “திருமணம் என்பது இருவர் இணைந்து வாழும் வாழ்க்கை. ஆனால் அது ஆணும் பெண்ணும் மட்டுமே இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. காலப்போக்கில் மாறிவரும் திருமணம் குறித்த கருத்துகளைப் பிரதிபலிக்கும் வகையில் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்பு, அனைத்து குடிமக்களுக்கும் அவர்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளும் உரிமையை அளிக்கிறது. பாலினத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை அரசியலமைப்பு சட்டம் தடை செய்கிறது. தன் பாலின ஈர்ப்பாளர்களும் மரியாதையான திருமணத்தை விரும்புகிறார்கள். திருமணம் செய்து கொள்ள முடியாததால், கூட்டு வங்கிக் கணக்குகளை வைத்திருக்கவோ, இருவரும் இணைந்து சொந்தமாக ஒரு வீட்டை வைத்திருக்கவோ அல்லது ஒன்றாக குழந்தைகளைத் தத்தெடுக்கவோ முடியவில்லை” என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அரசு தரப்பு எதிர்ப்பு:
தன்பாலினத்தவரை பாதிக்கும் சூழல் தொடர்பாக கவலை தெரிவித்த நீதிபதிகள், இதை நிவர்த்தி செய்ய அரசு என்ன திட்டமிட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர். அப்போது, இந்த பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் மட்டுமே முடிவெடுக்க முடியும் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த மனுக்களை நிராகரிக்க வேண்டும் எனவும், திருமணம் என்பது ஒர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மட்டுமே நடக்க முடியும் என வாதிடப்பட்டது.
பல்வேறு மத அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் தன்பாலின திருமணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அரசு மற்றும் மதத் தலைவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், வழக்கை விசாரிக்க நீதிபதிகள் முடிவு செய்தனர். மதங்கள் பின்பற்றும் சிவில் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாமல், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ், LGBTQ+ நபர்களை சேர்க்கும் வகையில் அதில் மாற்றங்களை கொண்டு வர முடியுமா என்று பார்க்க வேண்டுமென நீதிபதிகள் தெரிவித்தனர்.
இன்று தீர்ப்பு:
தொடர்ந்து மனுக்கள் மிதான தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே மாதம் 11ம் தேதி நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில், தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பான மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் காலத்தின் மாற்றத்திற்கேற்ப இந்தியா முன்னேறிச் செல்லுமா? அல்லது பழமைவாதத்துடன் தேங்கி நிற்கப்போகிறதாக என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
14 கோடி இந்தியர்கள்:
உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின்படி, சுமார் 14 கோடி LGBTQ+ சமூகத்தினர் இந்தியாவில் உள்ளனர். தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக உச்சநீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு அறிவித்தது. அதனை தொடர்ந்து தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பதற்கான ஆதரவு அதிகரித்துள்ளது. குறிப்பாக 2015ம் ஆண்டு 15 சதவிகிதமாக இருந்த இந்த ஆதரவு, கடந்த ஜுன் மாதம் நடந்த ஆய்வில் 53 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.