Mob Lynching : கும்பல் கொலைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னென்ன? மத்திய, மாநில அரசுகளிடம் உச்சநீதிமன்றம் கேள்வி..
கும்பல் கொலைகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் விவரங்களை கேட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது.
![Mob Lynching : கும்பல் கொலைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னென்ன? மத்திய, மாநில அரசுகளிடம் உச்சநீதிமன்றம் கேள்வி.. Supreme court asks information on action taken against Mob lynching know more details here Mob Lynching : கும்பல் கொலைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னென்ன? மத்திய, மாநில அரசுகளிடம் உச்சநீதிமன்றம் கேள்வி..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/11/ac455526d0ffdc33834b32af4f5c40621689074471072729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக கும்பல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவது அதிகரித்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மாட்டிறைச்சியை கடத்துவதாக கூறி இஸ்லாமியர்கள் அடித்து கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.
சிறுபான்மை சமூகத்தை குறி வைக்கிறதா கும்பல் கொலைகள்?
கடந்த 2015ஆம் ஆண்டு, உத்தர பிரதேசத்தில் வீட்டில் மாட்டிறைச்சியை வைத்திருப்பதாக கூறி, 51 வயது நபரான அக்லக் கும்பல் ஒன்றால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது. இப்படிப்பட்ட கும்பல் கொலை சம்பவங்கள் பெரும் பதற்றத்தை உண்டாக்கி வருகிறது.
பெரும்பாலும், மதவாத வெறுப்பின் அடிப்படையில்தான் இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழ்கிறது. இதற்கு, எதிராக உச்ச நீதிமன்றம் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு, கும்பல் கொலைகளை கொடூரமான செயல்கள் என கண்டித்த உச்ச நீதிமன்றம், இதை தடுக்க தனி சட்டம் இயற்றப்பட்டு, தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்தது.
மத்திய, மாநில அரசுகளிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி:
இந்த நிலையில், கும்பல் கொலைகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் விவரங்களை கேட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது. இது தொடர்பான வழக்கை சஞ்சீவ் கண்ணா மற்றும் பீலா திரிவேதி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
இன்றைய விசாரணையின்போது, "2018ஆம் ஆண்டு முதல், கும்பல் வன்முறை மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகார்கள், பதவி செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் சலான்கள் தொடர்பான ஆண்டு வாரியான தரவுகளை தாக்கல் செய்யுமாறு" மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு, ஜூலை 17ஆம் தேதி, தெஹ்சீன் பூனாவாலா வழக்கில் கும்பல் கொலைகளை தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. மாநிலங்களில் சம்பந்தப்பட்ட துறை தலைவர்களை சந்தித்து, இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விவரமாக சமர்பிக்க உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
வெறுப்புமிக்க பேச்சுகள், கும்பல் வன்முறை மற்றும் மாவட்டங்களில் நடக்கும் கொலைகள் பற்றிய உளவுத் தகவல்களை சேகரிக்க சிறப்பு அதிரடிப் படைகளை (STFs) அமைக்குமாறு மாநிலங்களுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், "கும்பல் வன்முறை, கும்பல் கொலைகளை தூண்டும் விதமான மெசேஜ்கள், வீடியோக்களை பரப்ப விடாமல் தடுப்பது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு.
எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்கும், பயனுள்ள விசாரணையை மேற்கொள்வதற்கும், கும்பல் வன்முறை மற்றும் கும்பல் கொலைகள் பற்றிய புகார்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கும் காவல்துறை கடமைப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)