Sonia Gandhi Congress : மாமியார் வழியை பின்பற்றும் சோனியா காந்தி? தெலங்கானாவில் காங்கிரஸ் போட்ட செம்ம பிளான்
தெலங்கானாவில் போட்டியிடுமாறு சோனியா காந்திக்கு தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் கடைசியாக உருவான மாநிலம் தெலங்கானா. பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு உருவான தெலங்கானாவின் முதல் இரண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியே வெற்றி பெற்றது. ஒன்பதரை ஆண்டுகால கே.சந்திரசேகர் ராவின் ஆட்சியை இந்த மாதம் காங்கிரஸ் முடிவுக்கு கொண்டு வந்தது.
தெலங்கானாவை குறிவைக்கும் காங்கிரஸ்:
ஒரு காலத்தில், ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம், காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கியது. கடந்த 2004 மற்றும் 2009 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம்.
எனவே, சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற வெற்றியை போலவே தெலங்கானாவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலிலும் வெற்றிபெற காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. நேரு குடும்பத்தை சேர்ந்த எவரேனும் ஒருவரை தெலங்கானாவில் போட்டியிட வைக்க மாநில தலைவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, தெலங்கானாவில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட மேடக் தொகுதியை பிரியங்கா காந்தி குறி வைத்துள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது. எமர்ஜென்சி முடிந்து நடத்தப்பட்ட தேர்தலில், மேடக் தொகுதியில் போட்டியிட்டுதான் இந்திரா காந்தி வெற்றிபெற்றார்.
மாமியார் வழியை பின்பற்றும் சோனியா காந்தி?
இந்த நிலையில், தெலங்கானாவில் போட்டியிடுமாறு சோனியா காந்திக்கு தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று நடைபெற்ற அரசியல் விவகாரக் குழு கூட்டத்தில், இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான காந்தி பவனில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, துணை முதலமைச்சர் பத்தி விக்ரமார்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஷபீர் அலி, "சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின் போது கட்சிக்காக பிரசாரம் செய்த மூத்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் தெலங்கானா மாநிலத்தில் இருந்து சோனியா காந்தி போட்டியிட வேண்டும் என்று தெலங்கான அரசியல் விவகாரக் குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. அவருக்கும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கும் கடிதம் எழுத உள்ளோம். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும் மேடக்கில் போட்டியிட்டார். இங்கு, அவர் போட்டியிட வேண்டும்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு ஒவ்வொரு மாநில அமைச்சரும் ஒரு மக்களவைத் தொகுதியின் பொறுப்பாளராக நியமிக்கப்படுவார்கள்" என்றார்.