Aditya L1: மீண்டும் வெற்றி..! விண்ணில் சீறிப்பாய்ந்தது ஆதித்யா எல்1 விண்கலம்.. சூரியனை நோக்கி ஒரு பயணம்
சூரியனை ஆய்வு செய்யும் நோக்கிலான ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
சூரியனை ஆய்வு செய்யும் நோக்கிலான ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, சுமார் 125 நாட்கள் சூரியனை நோக்கி பயணித்து, பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளது.
#WATCH | Indian Space Research Organisation (ISRO) launches India's first solar mission, #AdityaL1 from Satish Dhawan Space Centre in Sriharikota, Andhra Pradesh.
— ANI (@ANI) September 2, 2023
Aditya L1 is carrying seven different payloads to have a detailed study of the Sun. pic.twitter.com/Eo5bzQi5SO
அங்கிருந்து சூரியன் தொடர்பான பல்வேறு ஆய்வுகளை ஆதித்யா எல்.1 விண்கலம் செய்ய உள்ளது. 1,485 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் வெப்பசூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் மட்டுமே இதுவரை சூரியனை ஆய்வு செய்ய விண்கலங்களை அனுப்பியுள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. அதோடு, நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து சூரியனையும் ஆய்வு செய்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
ஆய்வுகள் என்ன?
பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய உள்ளது.
கருவிகளின் விவரங்கள்:
சூரியனின் ஒளி மண்டலம், நிற மண்டலம், சூரியனின் வெளிப்புற அடுக்குகள், ஒளி வட்டம் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்ய இதில் விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer), சூரியனின் வெளிப்புற அடுக்குகளில் ஏற்படும் டைனமிக் மாற்றங்களை ஆராயும் ஹெல் 10எஸ் ( High Energy L1 Orbiting X-ray Spectrometer), கிரகங்களுக்கு இடையேயான காந்த புலதன்மையை அளவிடும் மேக்னோ மீட்டர் என்ற ஆகிய கருவிகள் உள்ளன.
24 மணி நேர கவுன்ட்டவுன்:
ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் பாய்வதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. இந்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. சூரியனை ஆய்வு செய்யும் முதல் இந்திய விண்கலம் இதுதான். PSLV C-57 என்ற ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணிற்கு அனுப்பப்பட்டது.