சிவசேனா கட்சி சின்னத்துக்காக ரூ.2 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம்...எம்.எல்.ஏ ஒருவருக்கு 50 கோடி ரூபாய்...அரசியலில் புயலை கிளப்பிய உத்தவ் தாக்கரே..!
தேர்தல் ஆணையம் மீது தொடர் விமர்சனங்களை மேற்கொண்டு வரும் உத்தவ் தாக்கரே தரப்பு தற்போது பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
சிவசேனா கட்சியின் பெயரையும் வில் அம்பு சின்னத்தையும் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. உத்தவ் தாக்கரே தலையிலான சிவசேனா தரப்புக்கு, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிவசேனா கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகம் ஏற்படுத்தியதையடுத்து, கட்சி இரண்டாக உடைந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி என்றும் ஏக்நாத் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி என்றும் இரண்டாக பிரிந்தது.
கட்சியின் பெரும்பாலான எம்.எல்,ஏ.க்களின் உதவியாலும், பாஜகவுடனான கூட்டணியாலும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதலமைச்சர் பதவி கிடைத்தது.
கட்சியின் வில் மற்றும் அம்பு சின்னத்திற்காக இரு பிரிவும் போட்டி போட்டுவந்த நிலையில், உண்மையான சிவசேனா யார்? கட்சியின் சின்னம் யாருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு மனுக்கள் சமர்பிக்கப்பட்டன. இதையடுத்து, கட்சியின் பெயரையும் சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
அரசியலில் புதிய புயலை கிளப்பிய உத்தவ் தரப்பு:
இந்நிலையில், தேர்தல் ஆணையம் மீது தொடர் விமர்சனங்களை மேற்கொண்டு வரும் உத்தவ் தாக்கரே தரப்பு தற்போது பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. அதாவது, சிவசேனா கட்சி பெயரையும் சின்னத்தையும் வாங்க கடந்த 6 மாதத்தில் 2,000 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளனர்.
அதேபோல, கடந்தாண்டு ஏக்நாத் பிரிவில் சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு தலா ஒருவருக்கு 50 கோடி ரூபாய் அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து உத்தவ் தாக்கரே அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில், "சிவசேனா கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பெறுவதற்காக, ஆறு மாதங்களில் இதுவரை 2000 கோடி ரூபாய் மதிப்பிலான டீல் மற்றும் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
திடுக்கிடும் ஆதாரங்கள்:
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் கடந்த ஆண்டு கட்சியில் இருந்து விலகிய 40 எம்எல்ஏக்களுக்கு தலா 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இது குறைந்தபட்சம் மட்டுமே. நான் சொல்வது 100% உண்மை. விரைவில் பல்வேறு ஆதாரங்கள் வெளியிடப்படும். நாட்டின் வரலாற்றில் இதற்கு முன் இப்படி நடந்ததில்லை" என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தேர்தல் ஆணையம் குறித்து விமர்சித்த உத்தவ் தாக்கரே, "பிரதமர் மோடியின் அடிமையான தேர்தல் ஆணையம், இதுவரை செய்திராத செயலைச் செய்துள்ளது. ஆதரவாளர்கள் பொறுமையாக இருக்குமாறு கேட்டு கொள்கிறேன். அடுத்த தேர்தலுக்கு தயாராகுமாறும் வலியுறுத்துகிறேன். மும்பை மாநகராட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள். கட்சியின் சின்னம் திருடப்பட்டது. திருடனுக்கு பாடம் புகட்ட வேண்டும்" என்றார்.
சிவசேனா விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த தீர்ப்புக்காக காத்திருக்குமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திய தாக்கரே அணியினர், தற்போது வெளியான முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக கூறியுள்ளனர்.