Sharad Pawar: திடீர் திருப்பம்: என்சிபி தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்பப் பெற்று கொண்ட சரத் பவார்..!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளதாக சரத் பவார் அறிவித்தது அவரது கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த முடிவை திரும்பப் பெற்று கொண்டார் சரத் பவார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளதாக சரத் பவார் அறிவித்தது அவரது கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த முடிவை திரும்பப் பெற்று கொண்டார் சரத் பவார்.
திடீர் திருப்பம்:
இதுகுறித்து சரத் பவார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2ஆம் தேதி, எனது சுயசரிதை புத்தகமான 'லோக் பிரமை சங்கதி' வெளியீட்டின் போது, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகும் எனது முடிவை அறிவித்தேன். 63 ஆண்டுகள் பொது வாழ்வில் நீண்ட காலம் பணியாற்றிய பிறகு, இது எனது சொந்த முடிவு.
ஆனால் எனது முடிவு, மக்கள் மத்தியில் கடுமையாக உணர்வுகளை ஏற்படுத்தியது. கட்சித் தொண்டர்கள் மற்றும் எனது சகாக்கள் எனது முடிவைக் கேட்டு மனம் உடைந்தனர். எனது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி எனது விருப்பமுள்ள அனைவரும் ஒருமனதாக வேண்டுகோள் விடுத்தனர்.
அதே நேரத்தில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், எனது சகாக்கள் மற்றும் நாடு முழுவதிலுமிருந்து குறிப்பாக மகாராஷ்டிராவில் இருந்து நலம் விரும்பிகள் எனது முடிவை மாற்றும்படி என்னை வற்புறுத்தினர்.
அவர்களின் உணர்வுகளை என்னால் மதிக்காமல் இருக்க முடியாது. என் மீது பொழிந்த அன்பு, நம்பிக்கை மற்றும் நம்பிக்கையால் நான் உணர்வுகளால் நிரம்பி வழிகிறேன். உங்கள் அனைவரின் கோரிக்கைகளை பரிசீலித்து, கட்சியால் அமைக்கப்பட்ட குழுவின் முடிவை மதித்து, எனது ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
அதிர்வலைகளை ஏற்படுத்திய முடிவு:
முன்னதாக, சரத் பவாரின் முடிவு மகாராஷ்டிரா அரசியலை தாண்டி தேசிய அரசியலிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது. பவாரின் முடிவுக்கு எதிராக கட்சியின் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டர்கள் சிலர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, பவார் தனது முடிவை கைவிட வேண்டும் என திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் இன்று கோரிக்கை விடுத்தார். நாடு முழுவதும் மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத் பவார் கைவிட வேண்டும் என ஸ்டாலின் கேட்டு கொண்டார்.
கட்சியின் அடுத்த தலைவராக சுப்ரியா சுலேவையும் கட்சியின் மகாராஷ்டிரா முகமாக அஜித் பவாரையும் நியமிக்க மூத்த தலைவர்கள் ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது. சுப்ரியா சுலேவுக்கும் அஜித் பவாருக்கும் அதிகார போட்டி நிலவி வரும் நிலையில், பிரச்னையை தீர்க்கும் வகையில் இந்த திட்டம் முன்மொழியப்பட்டதாக கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியானது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், உத்தவ் தலைமையிலான சிவசேனா கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் அடுத்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.