10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Tamil Nadu 10th, 11th, 12th Public Exam 2025: 2025ஆம் ஆண்டுக்கான 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்குத் தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
2025ஆம் ஆண்டு மார்ச் / ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளை எழுத உள்ள தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேர்வர்கள் இன்று (டிசம்பர் 6) முதல் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறி உள்ளதாவது:
நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2025, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்:
மார்ச் / ஏப்ரல் 2025, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள், 06.12.2024 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 17.12.2024 (செவ்வாய்க் கிழமை) வரையிலான நாட்களில் (08.12.2024 மற்றும் 15.12.2024 (ஞாயிற்றுக் கிழமை) நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
குறிப்பாக மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு (Service Centres) நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்துகொள்ளலாம்.
அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள்:
மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித் தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலும், இவ்விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், சம்பந்தப்பட்ட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.
தேர்வுக் கால அட்டவணை
பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு இபாதுத் தேர்வுகளுக்கான தேர்வுக் கால அட்டவணைகளை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.