TNPSC Group 2 Result 2024: தேர்வர்களே… குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் சொன்னது இதுதான்!
TNPSC Group 2 Result 2024: முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குரூப் 2 தேர்வு முடிவுகள் இந்த மாதத்திலேயே வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கிய ராஜ் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்கள் குரூப் 1, 2, 3, 4 என பலவகையான தேர்வுகள் மூலம் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றது. டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையம் சார்பில் இந்தத் தேர்வுகள் நடைபெறுகின்றன.
48 பிரிவுகளில் உள்ள பணியிடங்கள்
குரூப் 2 தேர்வு மூலம் சுமார் 61 வகையான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு தொழிலாளர் சேவை துறையில் உள்ள உதவி ஆய்வாளர் தொடங்கி, கீழ் நிலை கிளர்க் வரை மொத்தம் 48 பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் குரூப் 2, 2ஏ தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் வெளியான அறிவிப்பில், 2,327 காலி பணி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வுகளுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 2.50 லட்சம் பேர் தேர்வை எழுதவில்லை என்று கூறப்படுகிறது.
காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தொடர்ந்து காலி இடங்களின் எண்ணிக்கை நவம்பர் மாதம் அதிகரிக்கப்பட்டது. திருத்தப்பட்ட பணிகளின் அடிப்படையில் வனத்துறையில் வனவர் பணி இடங்கள் 121 ஆகவும், குற்ற விசாரணைத் துறையில் 22 பணி இடங்கள் ஆகவும், லஞ்ச ஒழிப்புத்துறையில் 3 ஆகவும், தொழிலாளர் துறையில் 16 ஆகவும், சட்டத் துறையில் 6 ஆகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக குரூப் 2 தேர்வுக்கு 213 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், மொத்த காலியிடங்கள் 2,327-ல் இருந்து 2 ஆயிரத்து 540 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தேர்வு எழுதிய தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேர்வு முடிவுகள் எப்போது?
இந்த நிலையில் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல 2025 பிப்ரவரி மாதம் முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
டிசம்பர் மாதம் தொடங்கி, ஒரு வாரம் ஆகப்போகும் நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது என்று தேர்வர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் சொன்னது என்ன?
இதுகுறித்து பதிலளித்த டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கிய ராஜ் தனது எக்ஸ் பக்கத்தி, குரூப் 2 தேர்வு முடிவுகள் குறித்து நிறையக் கேள்விகள் எழுந்து வருகின்றன. தேர்வு அட்டவணையின்படி, முதல்நிலைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும். எனினும் இப்போது மாதத்தின் தொடக்கத்தில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/English/SelectionSchedule.html என்ற இணைப்பில் தேர்வுக்கால, தேர்வு முடிவுகளின் அட்டவணையை அறிந்துகொள்ளலாம்.