Puducherry BJP President: புதுச்சேரி பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி நியமனம்
Puducherry BJP President: அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதுச்சேரி பாஜக தலைமையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுச்சேரி பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி. நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தற்போது என். ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ், 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து, என். ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி முதலமைச்சராக பதவியேற்றார்.
புதுச்சேரி பாஜக தலைமையில் அதிரடி மாற்றம்:
பாஜகவை சேர்ந்த நமச்சிவாயத்திற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக, என். ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், புதுச்சேரி பாஜக தலைமையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பாஜக எம்.பி-ஆன செல்வகணபதியை புதுச்சேரி பாஜக தலைவராக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் நியமன எம்.எல்.ஏ.வும் பாஜகவின் பொருளாளராக உள்ள செல்வகணபதிக்கு தலைவர் பதவி அளிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
Organisational Appointment:
— BJP Central Media (@BJPCentralMedia) September 25, 2023
Puducherry BJP State President pic.twitter.com/7lyyigbFRC
கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த மாநிலங்களவை தேர்தலில், புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. இப்படிப்பட்ட சூழலில், பாஜக - என். ஆர். காங்கிரஸ் கூட்டணி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றார் செல்வகணபதி.
புதுச்சேரியில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக அறியப்படும் இவர், கூட்டணி கட்சிகளுடன் நல்லுறவை பேணி வருகிறார். குறிப்பாக, என்.ஆர். காங்கிரஸ், அதிமுக தலைவர்களுடன் இணைக்கமாக செயல்பட்டு வருகிறார். புதுச்சேரி பாஜக தலைவராக லாஸ்பேட்டையை சேர்ந்த சாமிநாதன் பதவி வகித்து வந்த நிலையில், அவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணியே வெற்றிபெற்றது. காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் கிட்டத்தட்ட 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தார். இச்சூழலில், அடுத்தாண்டு தேர்தலில், புதுச்சேரி தொகுதியில் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
நாகாலாந்து, மேகாலயாவுக்கு புதிய பாஜக தலைவர்:
புதுச்சேரியை தவிர்த்து மேகாலயாவிலும் புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேகாலயாவின் புதிய பாஜக தலைவராக ரிக்மன் மோமின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, நாகாலாந்து பாஜக தலைவராக பெஞ்சமின் யெப்தோமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.