The Kerala Story : நாட்டை பிளவுபடுத்துகிறது… 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை கடுமையாக சாடிய கேரள முதல்வர்
"வகுப்புவாதத்தின் விஷ விதைகளை விதைத்து" மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை அழிக்க சங்பரிவார் முயற்சிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.
நீதிமன்றங்கள், விசாரணை அமைப்புகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த ‘லவ் ஜிகாத்’ பிரச்சனையை எழுப்புவதன் மூலம் மாநிலத்தை மத தீவிரவாதத்தின் மையமாக சித்தரிக்கும் சங்பரிவார் பிரச்சாரத்தை கையிலெடுத்துள்ளது என, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் தயாரிப்பாளர்களை கடுமையாக சாடியுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
கடுமையாக சாடிய பினராயி விஜயன்
இந்த இந்தி படத்தின் டிரெய்லர், முதல் பார்வையில், வகுப்புவாத துருவமுனைப்பை உருவாக்கி, அரசுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பும் நோக்கத்துடன் "வேண்டுமென்றே தயாரிக்கப்பட்டதாக" தோன்றுகிறது என்று பினராயி விஜயன் கூறினார். ‘லவ் ஜிஹாத்’ விவகாரத்தை புலனாய்வு அமைப்புகள், நீதிமன்றங்கள் மற்றும் எம்ஹெச்ஏ நிராகரித்த போதிலும், கேரளாவை உலகத்தின் முன் இழிவுபடுத்துவதற்காக மட்டுமே படத்தின் முக்கியக் கருவாக கேரளாவைக் குறித்து முன்வைப்பதாக அவர் கூறினார்.
கேரளாவில் அரசியல் ஆதாயம் தேடும் சங்பரிவார்களின் முயற்சிகளின் பின்னணியில், இதுபோன்ற பிரச்சாரப் படங்கள் மற்றும் அவற்றில் தவறாக சித்தரிக்கப்படும் முஸ்லிம்கள் குறித்து பார்க்க வேண்டும் என்று முதல்வர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
32,000 பெண்கள் மதமாற்றம் செய்வது போன்ற காட்சி
"வகுப்புவாதத்தின் விஷ விதைகளை விதைத்து" மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை அழிக்க சங்பரிவார் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். கேரளாவில் சங்பரிவாரின் பிளவு அரசியல் செயல்படவில்லை என்பதால், மற்ற இடங்களில் செய்ததுபோல், எந்த உண்மையும் ஆதாரமும் இல்லாமல், “போலி கதைகளை” அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் மூலம் அதை பரப்ப முயற்சிப்பதாக பினராயி விஜயன் குற்றம் சாட்டினார். “படத்தின் ட்ரெய்லரில், கேரளாவில் 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு இஸ்லாமியர்களாக மாற்றப்பட்டதாக ஒரு புரளியைக் காண்பிக்கின்றனர். இந்த போலிக் கதை சங்பரிவாரின் பொய் தொழிற்சாலையின் விளைபொருள்" என்று முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இது கருத்து சுதந்திரம் அல்ல
மாநிலத்தில் மதவெறியை பரப்புவதற்கும், பிளவுகளை உருவாக்குவதற்கும் சினிமாவை பயன்படுத்துவதை கருத்து சுதந்திரம் என்று நியாயப்படுத்த முடியாது என்றார். “பொய் மற்றும் வகுப்புவாதத்தைப் பரப்புவதற்கும் மாநிலத்தில் மக்களைப் பிளவுபடுத்துவதற்கும் கருத்து சுதந்திரம் உரிமம் அல்ல,” என்று அவர் மேலும் கூறினார். இத்தகைய நகர்வுகளை மலையாளிகள் நிராகரிக்க வேண்டும் என்றும், பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் சமூகத்தில் வகுப்புவாத கலவரத்தை பரப்பும் முயற்சிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார். மேலும் சமூக விரோத செயல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு
கேரளாவில் எதிர்க்கட்சியான காங்கிரஸும் சர்ச்சைக்குரிய 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தாக்கினர். அக்கட்சி கருத்து சுதந்திரம் சமூகத்தில் விஷத்தை கக்கும் உரிமம் அல்ல என்று கூறியது. "தவறான கூற்றுகள் மூலம் சமூகத்தில் வகுப்புவாத பிளவுகளை" உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட சர்ச்சைக்குரிய திரைப்படத்தை திரையிட அனுமதி வழங்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சி ஆளும் அரசாங்கத்தை வலியுறுத்தியது. ஆளும் சிபிஐ(எம்)ன் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (டிஒய்எஃப்ஐ) படத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்ததுடன், அதன் டிரெய்லரே மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியது.
தி கேரளா ஸ்டோரி
இந்நிலையில் அடா ஷர்மா நடித்துள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சுதிப்தோ சென் எழுதி இயக்கிய கேரளா ஸ்டோரி, தென் மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் “சுமார் 32,000 பெண்களின்” பின்னணியில் உள்ள நிகழ்வுகளை “கண்டுபிடிப்பதாக” சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மதம் மாறியதாகவும், தீவிரவாதிகளாக மாறியதாகவும், இந்தியாவிலும் உலகிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் படம் தவறான செய்தியை கூறுகிறது. படத்தின் எழுத்தாளரும் இயக்குனருமான சுதிப்தோ சென் இதற்கு முன் 'ஆஸ்மா', 'லக்னோ டைம்ஸ்' மற்றும் 'தி லாஸ்ட் மாங்க்' ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். தி கேரளா ஸ்டோரி' தயாரிப்பாளராக பணியாற்றும் விபுல் அம்ருத்லால் ஷாவால் நிறுவப்பட்ட சன்ஷைன் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் இப்படம் தயாரிக்கப்படுகிறது.