Fact Check: பாலியல் வன்கொடுமையை தடுக்க கல்லறைக்கு பூட்டா? வைரலான புகைப்படத்தின் உண்மை பின்னணி என்ன?
சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டு வைரலான புகைப்படம் ஐதராபாத்தில் எடுக்கப்பட்டது எனத் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அந்நாட்டில் இருந்து பரவி வந்த ஒரு அதிர்ச்சிகரமான செய்தி பாகிஸ்தானில் பெண்கள் பாதுகாப்பு குறித்த பல கேள்விகளை எழுப்பியது. பாகிஸ்தானில் பிணங்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை தடுக்க பெண்களின் கல்லறையில் பூட்டு போடுகிறார்கள் என்று ஒரு செய்தி பல ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
வைரலான புகைப்படம்
பொதுவாக நெக்ரோபிலியா என்று அழைக்கப்படும் இவ்வகை குற்றம் உலகின் பல்வேறு இடங்களில் திகைக்க வைக்கும் விதமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள கல்லறைகள் கேட் போட்டு பூட்டால் பூட்டப்பட்டிருப்பதை காட்டும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்தன. இதற்கு காரணம் இறந்த உடல்களை பாலியல் வன்கொடுமை செய்வதை தடுப்பதற்காக என்று பரவலாக கூறப்பட்டது. பல குடும்பங்கள் தங்கள் மகள்கள் மற்றும் தாய்மார்கள் இறந்த பின்னரும் பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாக்க இது ஒரு புதிய நடைமுறையாக மாறியுள்ளது என்று பல அறிக்கைகள் கூறுகின்றன.
முதலில் வெளியிட்டவர்
முன்னாள் முஸ்லீம் நாத்திக ஆர்வலரும், "The Curse of God, why I left Islam" என்ற புத்தகத்தின் ஆசிரியருமான ஹாரிஸ் சுல்தான், இத்தகைய மோசமான செயல்களுக்கு கடுமையான இஸ்லாமிய சித்தாந்தத்தை குற்றம் சாட்டினார். "பாகிஸ்தான் பாலியல் விரக்தியுள்ள சமூகத்தை உருவாக்கியுள்ளது, மக்கள் தங்கள் மகள்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதைத் தடுக்க அவர்களின் கல்லறைகளில் பூட்டுகளை வைக்கிறார்கள். நீங்கள் புர்காவை கற்பழிப்புடன் இணைக்கும்போது, அது உங்களை கல்லறை வரை பின்தொடர்கிறது" என்று சுல்தான் புதன்கிழமை ட்வீட் செய்துள்ளார்.
உண்மை என்ன?
இந்நிலையில் உலகெங்கும் இதுகுறித்த விவாதம் பெரிதானது. ஆனால் பாகிஸ்தானில் இருந்து வெளியான அந்த படத்தில் உள்ள கல்லறை கிரில் கேட் போட்டு பூட்டப்பட்டிருப்பதற்கு காரணம் இதுதானா என்பதுதான் இந்த வைரல் செய்தியில் ஏற்பட்டுள்ள ட்விஸ்ட். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டு வைரலான புகைப்படம் ஐதராபாத்தில் எடுக்கப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. ஐதராபாத்தில் கல்லறைகளை தோண்டி எடுத்து, அதே இடத்தில் மற்றவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படும் செயல்கள் அதிகம் நடப்பதாகவும் அதைத் தடுக்கவே கல்லறைகளில் பூட்டு போடப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.
On being informed about the image of this grave being circulated with the claim that it is from Pakistan, Muqtar Sahab refuted it and added that the grille was constructed also with a view to preventing people from stamping on the grave since it was right in front of the entrance
— Mohammed Zubair (@zoo_bear) April 30, 2023
ஏறி நடக்காமல் இருக்க போடப்பட்டது
அதுபோக அந்த வைரல் புகைப்படத்தில் இருந்த கல்லறை, அந்த இடத்தின் நுழைவு வாயில் அருகிலேயே இருப்பதால், மற்றவர்கள் இதன் மீது ஏறி நடக்காமல் இருப்பதை தடுக்கும் வகையில் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மூதாட்டியின் மகன் இவ்வாறு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.
டெய்லி டைம்ஸ் படி, பாகிஸ்தானில் நெக்ரோபிலியா அதிகரித்து வருவதாகவும், புள்ளிவிவரங்களின்படி ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை நாட்டில் பாலியல் வன்கொடுமை நடைபெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போதிய விழிப்புணர்வின்மை மற்றும் சரியான கல்வியின்மை காரணமாக நாட்டில் உள்ள பலரின் பாலியல் விரக்தியே காரணம் என்று செய்தி அறிக்கை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது