MP Church: சர்ச்சில் ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் காவிக்கொடி? எவ்வளவு சொல்லியும் கேட்கல: பாதிரியார் வேதனை
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில் நேற்று திறக்கப்பட்டது. பிரதமர் மோடி பங்கேற்று அங்கு நிறுவப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில் தேவாலயம் ஒன்றில் காவிக்கொடி ஏற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
ரூ.1800 கோடி செலவில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில் நேற்று திறக்கப்பட்டது. பிரதமர் மோடி பங்கேற்று அங்கு நிறுவப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார். இதனிடையே நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில் காவிக்கொடியுடன் ஜெய் ஸ்ரீராம் முழக்கமிடும் சிலர் தேவாலயம் ஒன்றின் மீது காவிக்கொடி ஏற்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு தொடர்பான கொண்டாட்டங்கள் களைக்கட்டிய நிலையில், இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை கிளப்பியது. சம்பந்தப்பட்ட அந்த வீடியோ, மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டம் ராணாபூரில் எடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தப்தலை கிராமத்தில் அமையப் பெற்றுள்ள தேவாலயத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா கொண்டாட்டத்தில் காவிக் கொடியுடன் வந்த சிலர், தேவாலயம் மீது ஏறியுள்ளனர். அங்கு நிறுவப்பட்டுள்ள சிலுவை மீது காவிக்கொடியை கட்டி ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டனர். அந்த சம்பவம் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற்றது.
Hey Ram .. will this be the new normal of our country #justasking pic.twitter.com/Hd2i8YxcAb
— Prakash Raj (@prakashraaj) January 22, 2024
இதுகுறித்து அந்த தேவாலயத்தின் போதகராக உள்ள நர்பு அமலியார் என்பவர் தெரிவிக்கையில், ‘வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை முடிந்தபோது சிலர் ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் உள்ளே நுழைந்தனர். அந்த கூட்டத்தில் குறைந்தது 25 பேர் வரை இருந்தனர். அவர்களில் சிலர் தான் ஆலயம் மீது ஏறி காவிக்கொடியை கட்டினர். அவர்கள் அனைவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எனக்கு நன்றாகவே அந்த நபர்களை தெரியும். இப்படி செய்வது நல்லதல்ல என எவ்வளவோ சொன்னேன். மேலும் தேவாலயத்துக்கு வரும் மக்களை தொந்தரவு செய்யாதீர்கள் என சொன்னேன். ஆனால் அந்த நபர்கள் எதுவும் கேட்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுதொடர்பான ஜாபுவா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அகம் ஜெயின், ‘இந்த சம்பவத்தில் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். அது உண்மையில் தேவாலயம் கிடையாது. ஒரு தனிநபரின் வீடு என்பதால் வழக்கு எதுவும் பதியவில்லை’ என தெரிவித்துள்ளார்.