Sabarimala: சபரிமலையில் இன்று மண்டல பூஜை .. சரண கோஷங்களுக்கு நடுவே அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!
நடப்பு மண்டல பூஜை காலத்தில் முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 1,00,969 பேர் சாமி தரிசனம் செய்ததாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலையில் இன்று மண்டல பூஜை நடைபெறும் நிலையில், இன்று இரவு 9 மணியளவில் நடை அடைக்கப்பட உள்ளதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் சீசன் காலமாகும். இந்த நாட்களில் ஐயப்ப பக்தர்கள் ஒரு மண்டலம் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வர். இதனால் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் ஐயப்ப பக்தர்கள் வருகையால் களைக்கட்டும்.
நடப்பு மண்டல பூஜை காலத்தில் முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 1,00,969 பேர் சாமி தரிசனம் செய்ததாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கிட்டதட்ட சபரிமலையில் பக்தர்கள் சுமார் 20 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கார்த்திகை மாதத்தில் மட்டும் முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது.
இந்நிலையில் சபரிமலையில் இன்று மண்டல பூஜை நடைபெறுகிறது. முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுகிறது. இதற்கு திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் காணிக்கையாக கொடுக்கப்பட்ட தங்க அங்கி ஆறன்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து சபரிமலைக்கு வீதியுலாவாக கொண்டு வரப்பட்டது. கடந்த 23 ஆம் தேதி ஆறன்முழா கோயிலில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி பம்பையில் உள்ள கணபதி கோயிலுக்கு நேற்று மாலை வந்தடைந்தது.
தொடர்ந்து சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டது. மாலை 6.30 மணிக்கு ஐபய்ய சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமியே சரணம் ஐயப்பா என கோஷமிட்டனர். தங்க அங்கி அணிவிக்கப்பட்ட நிலையில் இன்று முற்பகல் 11.30 மணியில் இருந்து ஒரு மணிக்குள் மண்டல பூஜை நடைபெறுகிறது. மாலை 5 மணி புஷ்ப அபிஷேகமும், இரவு அத்தாழ பூஜையும் நடைபெற்ற பின்னர் கோயில் நடை அடைக்கப்படும். இதன் பின்னர் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை டிசம்பர் 30 ஆம் தேதி மாலை தான் திறக்கப்படும். 31 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 15 ஆம் தேதி மகரவிளக்கு ஜோதி நடைபெறுகிறது.
இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்