நிழலுலக தாதா சோட்டா ராஜன் மரணம் குறித்த தகவல் வதந்தி : முற்றுப்புள்ளி வைத்தது எய்ம்ஸ்..
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சோட்டா ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழிந்ததாகத் தகவல் பரவிவந்தது
மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாக வெளியான தகவலை வதந்தி என மறுத்துள்ளது டெல்லி காவல்துறை. சோட்டா ராஜன் என அழைக்கப்பட்ட ராஜேந்திர நிகல்ஜே(61) மும்பையின் 70க்கும் மேற்பட்ட பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர். 2015-ஆம் ஆண்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடிய சோட்டா ராஜனை இந்திய போலீசார் இந்தோனேசியாவில் கைது செய்தனர். இதன்பிறகு பலத்த பாதுகாப்புடன் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். சோட்டா ராஜனின் மீதான வழக்குகள் சிபிஐ தரப்புக்கு மாற்றப்பட்ட பின்னர் மும்பை நீதிமன்றத்தில் இருந்த அவர் மீதான வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
வழக்கு ஒன்றின் மீதான விசாரணை கடந்த 26 ஏப்ரல் 2021 அன்று காணொளி வழியாக நடைபெறவிருந்த நிலையில் ராஜனுக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் அவரால் வழக்கு விசாரணையில் பங்கேற்க முடியவில்லை எனச் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ராஜன் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் எனத் தகவல் வெளியானது. தற்போது டெல்லி காவல்துறையும் எய்ம்ஸ் மருத்துவமனையும் அந்தத் தகவலை பொய் என்று மறுத்துள்ளது. மேலும் சோட்டா ராஜன் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
Also Read: அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிப்பது எப்படி? மத்திய அரசின் வழிமுறைகள் என்ன?