Right Wing outfits: ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்க.. கிறிஸ்துமஸ் விழாவில் குழந்தைகளுடன் மல்லுகட்டிய கும்பல்!
இந்தியக் கலாச்சாரத்தை பாதுகாக்க நீங்கள் ஒவ்வொருவரும் தீர்மானம் எடுத்துக் கொள்ளுங்கள்... ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்குங்கள்
உலகத்தின் அநேக மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வரும் வேளையில், ஹரியானா மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகளிடம் இந்துத்துவா ஆதரவாளர்கள் அச்ச உணர்வை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டுள்ளனர்.
குருகுராம் மாவட்டத்தில் பட்டெடி நகரில் அமைந்துள்ள பள்ளியில், கிறித்தவ பெருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பிரார்த்தனை நேரத்தின் போது நுழைந்த இந்துத்துவ ஆதரவாளர்கள் குழந்தைகளை ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் நபர் ஒருவர், "நாங்கள் இயேசுவை அவமரியாதை செய்யவில்லை.. ஆனால், அடுத்த தலைமுறை குழந்தைகள் மதத்தின் பெயரால் ஈர்க்கக்கூடாது. அது, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அழித்து விடும் என்று நினைவூட்ட விரும்புகிறேன். இந்தியக் கலாச்சாரத்தை பாதுகாக்க நீங்கள் ஒவ்வொருவரும் தீர்மானம் எடுத்துக் கொள்ளுங்கள்... ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்குங்கள்" என்று பேசியுள்ளார்.
Christmas prayers disrupted in Pataudi, Gurugram:
— Aishwarya S Iyer (@iyersaishwarya) December 25, 2021
“We aren't disrespecting Christianity," the man on stage says.
He tells the kids, “The destruction of Indian culture has started, you all have to resolve to stop it. With the same resolve say, Jai Sri Ram! Sanatan Dharam ki, Jai!" pic.twitter.com/XoHHvATFPn
சமீபத்திய நாட்களில், இந்தியாவில் செயல்படும் அநேக கிறிஸ்த்துவ தேவாலயங்கள் மீதும், கிறித்தவ சிறுபான்மையினர் மீதும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. குறிப்பாக, கிறிஸ்தவ போதர்களுக்கும் பிரார்த்தனை கூட்டங்களில் பங்குபெறுவோருக்கும் எதிரான வன்செயல் சம்பவங்களை Association for Protection of Civil Rights அமைப்பு வெளியிட்ட உண்மை கண்டறியும் அறிக்கை ஆவணப்படுத்தியது. கிறிஸ்துவ சமயச்சார்பான குழுக்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களைக் கைவிடுமாறும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த டிசம்பர் 17 முதல் 19 வரை மூன்று நாட்கள் நடைபெற்ற தரம் சன்சத் என்ற இந்துமத மாநாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் வன்முறை தூண்டும் விதமாக பேசியதாக தகவல் வெளியாகியது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இந்துத்துவ நரசிங்கானந்த், '2029-ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக ஒரு இஸ்லாமியர்' என்ற கருப்பொருள்தான் இந்த மாநாட்டின் முக்கியமான விஷயம். இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்த, ஏழெட்டு ஆண்டுகளில் சாலைகளின் நாம் பார்க்கக்கூடிய மனிதர்களெல்லாம் இஸ்லாமியராகத்தான் இருக்கமுடியும்
2029-ஆம் ஆண்டில் இஸ்லாமியர் ஒருவர் நாட்டின் பிரதமரானால் என்ன நடக்கும்? இஸ்லாத்தின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இதற்கு பதில் கிடைக்கும். நாட்டைக் கைப்பற்றிய 20 ஆண்டுகளில் 50% இந்துக்கள் மதம் மாற்றப்படுவார்கள், 40% இந்துக்கள் கொல்லை செய்யப்படுவார்கள். எஞ்சிய 10% பேரும் அமெரிக்கா, கனடா, லண்டன், ஐரோப்பா (அ) இந்தியாவில் உள்ள ஐநா அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். மடங்கள் இருக்காது, கோவில்கள் இருக்காது. தாய்மார்களும், சகோதரிகளும் பாலியல் வல்லுறவுக்காக சந்தையில் விற்கப்படுவார்கள்.
பொருளாதார ரீதியாக ஒத்துழையாமை நடவடிக்கையை இந்துக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுத்த அவர், "திறமையான ஆயுதங்களை கொண்டுதான் யுத்தங்களை வெல்ல முடியும். வாள்முனையில் காரியம் சாதிக்க முடியாது. காட்சிப் பொருளாக வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சிறந்த ஆயுதமே வெல்லும்” என்று பேசினார்.