Repo Rate: வங்கியில் கடன் வாங்கியவர்களா? உங்களுக்கான நற்செய்தி - 4வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் மாறவில்லை. - ஆர்பிஐ
தொடர்ந்து நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் மேற்கொள்ளவில்லை.
நிதி பற்றாக்குறை ஏற்படும் போது, மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு குறிப்பிட்ட வட்டி வகிதத்தில் கடன் அளிக்கும். அதன் பெயர்தான் ரெப்போ வட்டி ஆகும். பணவீக்கத்தின்போது, கடன் வாங்குவதை தவிர்க்கும் வகையில் ரெப்போ வட்டியை மத்திய வங்கி உயர்த்தும். இதன் மூலம், பொருளாதாரத்தில் பண புழக்கம் ஒழுங்குபடுத்தப்பட்டு, பண வீக்கம் குறைக்கப்படும்.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை:
இந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் மேற்கொள்ளவில்லை.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசுகையில், "வளர்ந்து வரும் மேக்ரோ பொருளாதாரம் மற்றும் நிதி முன்னேற்றம் ஆகியவற்றின் விரிவான மதிப்பீட்டிற்குப் பிறகு, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு, ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவிகிதமாக நீடிக்க ஏகமனதாக முடிவு செய்தது.
அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, நடப்பு நிதியாண்டான 2023-24 ஆண்டுக்கான உண்மையான GDP வளர்ச்சி 6.5 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அனைத்து அபாயங்களும் சமமாக கையாளப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவிகிதமாக இருக்கும்.
கொரோனா காலத்தில் சரிந்த பொருளாதாரத்தை சரி செய்ய முயற்சி:
நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் 2023-24 ஆண்டுக்கு 5.4 சதவிகிதமாகவும் இரண்டாவது காலாண்டில் 6.4 சதவிகிதமாகவும் மூன்றாவது காலாண்டில் 5.6 சதவிகதமாகவும் நான்காவது காலாண்டில் 5.2 சதவிகிதமாகவும் இருக்கும். அபாயங்கள் சமநிலையில் கையாளப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 7.3 சதவிகிதமாக ஆக இருந்த மொத்த பணவீக்கம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 4.6 சதவிகிதமாக குறைந்துள்ளது. நடப்பு 2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் வர்த்தக பற்றாக்குறை கடந்த ஆண்டை விட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.1 சதவிகிதமாக குறைந்துள்ளது" என்றார்.
கொரோனா காலத்தில் சரிந்த பொருளாதாரத்தை சரி செய்வதறகாக இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த வட்டி விகிதம், கடந்த 2022 மே மாதம் முதல் ஆறு முறை உயர்த்தப்ப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டில் 4 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் புதிய கொள்கையின் படி, 6.25 சதவீதமாக உயர்த்தியது. அதன்பிறகு, கடந்த பிப்ரவரி மாதம் 6.5 சதவீதமாக உயர்த்தியது.
பணவீக்கம் என்றால் என்ன?
வங்கிகளில், அதிக பணம் இருந்தால், மக்களுக்கு அதிக கடன்களை வங்கிகள் வழங்கும். அதனால் மக்கள் கைகளில் பண புழக்கம் அதிகரிக்கும். இதனால், மக்கள் அதிக பொருட்களை வாங்கும் தன்மை அதிகரிக்கும். மக்கள் அதிக பொருட்களை வாங்கும் தன்மை ஏற்படும் போது, பொருட்களின் விலையும் அதிகரிக்கும். இதுவே பணவீக்கம் என அழைக்கப்படுகிறது.
எனவே பணவீக்கத்தை குறைக்க வேண்டுமானால் ( அதாவது பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ), மக்களிடம் பணப்புழக்கத்தை குறைக்க வேண்டும்.
ஆகையால், வங்கிகளில் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம், கடன் வாங்குபவர்கள் குறைய தொடங்குவார்கள். கடன் வாங்குவது குறையும் போது, மக்களிடம் பணப்புழக்கம் குறையும். பணப்புழக்கம் குறைந்தால் பொருட்களை மக்கள் வாங்குவது குறையும். பொருட்களை வாங்காத போது, அதன் விலை குறைய தொடங்கும். பணவீக்கமும் குறையும்.