மியான்மரில் 30 இந்தியர்கள் மீட்பு...மற்றவர்களை விடுவிக்க நடவடிக்கை...மத்திய அரசு தகவல்
இந்தியர்கள் ராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது என்றும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
மியான்மர் நாடு, கடந்த 1962ஆம் ஆண்டிலிருந்து 50 ஆண்டு காலமாக ராணுவ ஆட்சியின் கீழ் இருந்தது. 50 ஆண்டு கால ராணுவ ஆட்சிக்குப் பிறகு 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி தொடர்ந்து 2020ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்றது.
ஆனால் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நம்பகத்தன்மை இல்லை எனக் கூறி ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு அந்நாட்டு ராணுவம் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. முந்தைய காலங்களில் வீட்டுச் சிறையில் இருந்த சூகி மீண்டும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.
இச்சூழலில், அங்குள்ள இந்தியர்கள் ராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பர்மாவில் உள்ள இந்திய தூதரகம் அவர்களுக்கு உதவி செய்யவில்லை என்றும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், பாதுகாப்புச் சவால்கள் மற்றும் பிற சட்ட மற்றும் தளவாடச் சிக்கல்கள் இருந்தபோதிலும், நாங்கள் இதுவரை 30க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டுள்ளோம் என்றும் மேலும் குற்றவாளிகளிடம் உள்ள மற்ற இந்தியர்களை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றும் மியான்மரில் உள்ள இந்திய தூதரகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
Despite security challenges and other legal and logistical difficulties, we have rescued more than 30 Indians so far, and are making all possible efforts to secure the release of other Indians who have fallen prey to criminal groups. @meaMADAD @narendramodi @VishnuU89173888
— India in Myanmar (@IndiainMyanmar) September 20, 2022
முன்னதாக, சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (21-9-2022) கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
''மியான்மர் நாட்டில் சுமார் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டிருப்பதாக மாநில அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை இந்தியப் பிரதமரின் உடனடி கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். அவர்கள் ஆரம்பத்தில் தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்து நாட்டிற்குச் சென்றதாகத் தெரிய வருகிறது.
ஆன்லைனில் சட்ட விரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு அவர்கள் தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது தற்போது தெரிய வருகிறது. அவர்கள் அத்தகைய சட்ட விரோத வேலைகளை செய்ய மறுத்ததால் வேலையளிப்போரால் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன.
அவர்களில் 17 தமிழர்களுடன் மாநில அரசு தொடர்பில் உள்ளனர். அவர்களை விரைவாக மீட்பதற்கு அரசின் உதவியை நாடுகின்றனர். மியான்மரில் சட்டவிரோதமாக சிறை பிடிக்கப்பட்டுள்ள நமது குடிமக்களின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக அவர்களை மீட்க வேண்டும். மீட்டு, பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப அழைத்துவரவும், மியான்மரில் உள்ள தூதரகத்திற்கு இப்பிரச்சினை குறித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கவேண்டும். இது தொடர்பாக பிரதமரின் அவசர தலையீட்டைத் கோருகிறேன்''.
இவ்வாறு தனது கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, ’தாய்லாந்துக்கு வேலை தேடிச் சென்ற இந்திய இளைஞர்களை, மியான்மர் நாட்டின் மியாவாடி நகருக்கு கடத்திச் சென்று, கட்டாயப்படுத்தி சட்ட விரோதமான வேலைகளில் ஈடுபடுத்துவது பற்றிய அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த இளைஞர்களை உடனே இந்திய அரசு மீட்க வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.