Religious Conversion : ”மதமாற்றம் சீரியஸான விவகாரம்...அரசியல் சாயம் பூசாதிங்க!” - உச்சநீதிமன்றம் கறார்
அரசியலமைப்பின் பட்டியல் 2 நுழைவு 1-ன் கீழ் மத மாற்றம் தொடர்பான விவகாரம் மாநிலப் பட்டியலில் இடம்பெறுகிறது என்றும் வில்சன் கூறினார்
ஒட்டுமொத்த தேசத்தையும் கவலையடையச் செய்யும் பலாத்காரம், வஞ்சகம் போன்ற அருவருக்கத்தக்க செயல்களின் மூலம் மத மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பான வழக்குக்கு தமிழ்நாடு அரசு அரசியல் சாயம் பூசுவதாக உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.
நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி ரவிகுமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மூலம் வாய்வழி அவதானிப்பாக இந்த விமர்சனம் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கூறுகையில், ”மனுதாரரான வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் ஒரு பாஜக செய்தி தொடர்பாளர், தேசத்துரோக வழக்கை எதிர்கொள்கிறார் மற்றும் இது அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு" என்று கூறினார்.
'Charity Can't Be For Conversion' : Supreme Court In PIL Against Forced Religious Conversion [VIDEO] @aaratrika_11 https://t.co/f8fDflzCz9
— Live Law (@LiveLawIndia) December 5, 2022
அரசியலமைப்பின் பட்டியல் 2 நுழைவு 1-ன் கீழ் மத மாற்றம் தொடர்பான விவகாரம் மாநிலப் பட்டியலில் இடம்பெறுகிறது என்றும் வில்சன் கூறினார். மனுதாரர் கூறியது போல் தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மதமாற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் 2002ம் ஆண்டு மத மாற்றம் தொடர்பான சட்டம் தமிழ்நாட்டில் ரத்து செய்யப்பட்டது என்றும் வாதாடினார்.
"இந்த விஷயத்தை தமிழ்நாடு சட்டமன்றத்திடம் விட்டு விடுங்கள். எங்கள் மாநிலத்தில் மதமாற்ற அச்சுறுத்தல் இல்லை. இது அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு. உபாத்யாய் தமிழ்நாடு என்னும் ஒரு மாநிலத்தையே ஒரு அரசியல் கட்சியைக் கையாளுவது போலக் கையாள்கிறார்” என்று வில்சன் கடுமையாக எதிர்த்தார்.
இதற்கு பதில் அளித்த நீதிமன்றம் "இந்த வழக்குக்கு அரசியல் சாயம் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். அது எடுத்த எடுப்பிலேயே மாநில அரசு அரசியல் சாயத்தை கொண்டு வர விரும்புகிறது என்பதைத்தான் காட்டுகிறது. நாங்கள் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம்... நீங்கள் இப்படி கிளர்ந்தெழ பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் அதை நீதிமன்றத்தை விட்டு வெளியில் செய்யுங்கள். நாங்கள் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை பரிசீலித்து வருகிறோம். மற்றும் இதன்மூலம் நாங்கள் 'A', 'B' அல்லது 'C' என ஏதோ ஒரு மாநிலத்தைப் பற்றி குறிப்பிட்டுப் பேசவில்லை. உங்கள் மாநிலத்தில் அவ்வாறு கட்டாயமான அல்லது வஞ்சகமான வ்ழியிலான மத மாற்றங்கள் நடந்தால், அது மோசமானது, அது நடக்கவில்லை என்றால், நல்லது, நாங்கள் ஒரே ஒரு மாநிலத்தை குறிவைத்து இதனைச் சொல்லவில்லை," என்று நீதிபதி ஷா வழக்கறிஞர் வில்சனிடம் பேசினார்.