(Source: ECI/ABP News/ABP Majha)
2000 ரூபாய் நோட் இருக்கா உங்ககிட்ட.. உடனே போய் மாத்துங்க.. இன்றே கடைசி நாள்..
2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் இன்று என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு 2016 -ஆம் ஆண்டு நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். ஒட்டுமொத்த நாட்டையே அதிர வைத்த அந்த அறிவிப்புக்கு பிறகு, புதிய 500 ரூபாய் நோட்டுகளையும், 1000 ரூபாய்க்கு பதிலாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது.
இந்த நிலையில், மே மாதம் 19-ஆம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்கு பிறகு புழக்கத்தில் உள்ள ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்றும், வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது. 2019-ஆம் ஆண்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை பெருவாரியாக மத்திய அரசு நிறுத்திவிட்டதாலும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் பெருமளவில் குறைந்துவிட்டது.
கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி, இதுவரை 3.32 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் 30-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
அக்டோபர் 7-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பில், “மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய/மாற்றுவதற்கான தற்போதைய ஏற்பாட்டை அக்டோபர் 7-ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டு தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், புழக்கத்தில் இருந்த ரூ.3.43 லட்சம் கோடியில், 87 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்துவிட்டது. இன்னும் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பவில்லை என்று கூறினார்.
வங்கிக் கிளையோ அல்லது வேறு எந்த நிறுவனமோ 2000 ரூபாய் நோட்டை மாற்றிக் கொள்ள மறுக்கும் சூழ்நிலையை யாராவது சந்தித்தால், புகாரின் பெயரில் அதற்கான தகுந்த வழி கிடைக்கும். இதுபோன்ற சம்பவம் நடந்தால் தனிநபர்கள் அந்தந்த வங்கிகளுக்குச் சென்று புகார் அளிக்கலாம். 30 நாட்களுக்குள் வங்கி பதிலளிக்கவில்லை என்றாலோ அல்லது வங்கியின் பதிலில் புகார்தாரர் அதிருப்தி அடைந்தாலோ, RBI போர்ட்டல் cms.rbi.org.in இல் புகாரைப் பதிவுசெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது குறித்து விளக்கம் அளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், "மக்கள் தங்கள் பணத்தைக் கோருவதற்கு அவசரப்பட வேண்டியதில்லை. திரும்பப் பெறுதல் நிதி ஸ்திரத்தன்மையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதால் பொருளாதாரத்தில் எந்த எதிர்மறையான தாக்கத்தையும் நான் காணவில்லை" என்றார்.
சில காலமாகவே மக்களின் செலவிடும் திறன் பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் முடிவால் நுகர்வோர் அதிக அளவில் செலவிடுவார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.
TTF Vasan: டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து.. போக்குவரத்துத்துறை அதிரடி..
PM Modi: ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்கள்.. பிரதமர் மோடி வாழ்த்து..