"அவரு தலித்.. அதனால கொன்னுட்டாங்க" போலீஸ் கஸ்டடி மரணம்... மனம் நொந்து பேசிய ராகுல் காந்தி
மகாராஷ்டிரா போலீஸ் கஸ்டடி மரணம் தொடர் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.
மகாராஷ்டிராவில் நடந்த வன்முறையை தொடர்ந்து கைது செய்யப்பட்டு, போலீஸ் கஸ்டடியில் இருந்த இளைஞர் சந்தேகத்திற்குரிய வகையில் மரணம் அடைந்திருப்பது பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.
மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி நகரில் உள்ள ரயில் நிலையம் அருகே அண்ணல் அம்பேத்கர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையின் கையில் இருக்கும் அரசியலமைப்பு புத்தகத்தின் மாதிரியை கடந்த 10ஆம் தேதி, சில விஷமிகள் சேதம் செய்தனர்.
போலீஸ் கஸ்டடி மரணம்:
இதையடுத்து, பர்பானி நகரில் வன்முறை வெடித்தது. பர்பானியில் உள்ள சங்கர் நகரைச் சேர்ந்த சோம்நாத் சூர்யவன்ஷி, வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் இருந்தபோது நெஞ்சுவலியால் அவதிப்பட்டு, கடந்த டிசம்பர் 15ஆம் தேதி உயிரிழந்தார்.
சூர்யவன்ஷியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பு வருகின்றனர். இந்த நிலையில், இறந்த இளைஞரின் குடும்பத்தை நேரில் சந்தித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று ஆறுதல் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "உயிரிழந்த குடும்பத்தினரையும் வன்முறையில் தாக்கப்பட்டவர்களையும் சந்தித்தேன். பிரேத பரிசோதனை அறிக்கை, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எனக்குக் காட்டினர்.
பரபரப்பை கிளப்பிய ராகுல் காந்தி:
இது, போலீஸ் கஸ்டடி மரணம். போலீசார் அவரை கொன்றனர். காவல்துறையினருக்கு செய்தி அனுப்ப முதல்வர் சட்டசபையில் பொய் சொல்லி இருக்கிறார். இந்த இளைஞன் ஒரு தலித் என்ற காரணத்திற்காகவும், அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்காகவும் கொல்லப்பட்டிருக்கிறார்.
அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டு வருவதே ஆர்எஸ்எஸ் சித்தாந்தம். இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "தனது அரசியல் நோக்கத்திற்காக பர்பானிக்கு அவர் (ராகுல் காந்தி) வந்துள்ளார். நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். உண்மை வெளிவரும். விசாரணையில் சூர்யவன்ஷி தாக்கப்பட்டதால் இறந்தார் என கண்டுபிடிக்கப்பட்டால், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிக்க: All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!