Watch video: டெலிவரி ஏஜெண்டுடன் ஸ்டைலாக டபுள்ஸ் சென்ற ராகுல்காந்தி...! கர்நாடக தேர்தலில் சுவாரஸ்யம்..!
இந்திய ஒற்றுமை பயணத்தில் இருந்தே, பொது மக்களிடம் சென்று சேரும் வகையிலும் அவர்களுடன் தனிப்பட்ட தொடர்பை ஏற்படுத்தி கொள்ளும் நோக்கிலும் பல்வேறு விதமான முயற்சிகளை ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார்.
கர்நாடகாவில் வரும் 10ஆம் தேதி, சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான முடிவுகள், 13ஆம் தேதி, அறிவிக்கப்பட உள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.
கர்நாடக தேர்தல்:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அரசியல் பரபரப்பு தொற்றி கொண்டது. கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாளை மாலையுடன் கர்நாடக தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடையும் நிலையில், தேசிய தலைவர்கள் தொடங்கி உள்ளூர் தலைவர்கள் வரை அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இறுதி கட்டத்தை நெருங்கிய பிரச்சாரம்:
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் பரப்புரை செய்து வருகின்றனர்.
இந்திய ஒற்றுமை பயணத்தில் இருந்தே, பொது மக்களிடம் சென்று சேரும் வகையிலும் அவர்களுடன் தனிப்பட்ட தொடர்பை ஏற்படுத்தி கொள்ளும் நோக்கிலும் பல்வேறு விதமான முயற்சிகளை ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் டெலிவரி ஊழியர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தில் ஏறி பின் இருக்கையில் அமர்ந்து ராகுல்காந்தி பயணித்த சம்பவம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.
ஸ்டைலாக டபுள்ஸ் சென்ற ராகுல் காந்தி:
ஸ்கூட்டரில் ராகுல்காந்தி பயணிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ராகுல்காந்தி ஆதரவாளர்கள் கூட்டத்தால் சூழ்ந்திருப்பதை காணலாம். பின்னர், அழுது கொண்டிருக்கும் சிறுவன் ஒருவரை ராகுல் காந்தி சமாதானம் செய்கிறார். அப்போது, டெலிவரி ஊழியர் ஒருவர், அவர் அருகே பைக்கை நிறுத்துகிறார்.
உடனடியாக, ராகுல் காந்தி, ஹெல்மெட்டைப் போட்டுக்கொண்டு டெலிவரி ஏஜென்ட்டின் பின்னால் அமர்ந்து பயணிக்க தொடங்குகிறார். இருவரும் மெதுவாக ஆதரவாளர்கள் கூட்டத்திலிருந்து விலகிச் செல்கின்றனர். ஹோட்டலை சென்றடையும் வரை சுமார் இரண்டு கிமீ தூரத்திற்கு ராகுல் காந்தி ஸ்கூட்டரின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது.
Rahul Gandhi Travelling at Bike 🔥🔥🔥🔥❤❤😍😍#KarnatakaAssemblyElection pic.twitter.com/jaZM6Q9K6d
— Ashish Singh (@AshishSinghKiJi) May 7, 2023
மாணவர்களுடன் சந்திப்பு:
சமீப காலமாக, தனித்துவமான ஸ்டைலில் மக்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ள ராகுல் காந்தி, பழைய டெல்லியில் உள்ள சந்தைக்கு ரம்ஜான் பண்டிகையின் போது சென்று, அந்த பகுதியின் பிரபலமான உணவுகளை ருசித்து மகிழ்ந்தார். நேற்று முன்தினம், டெல்லி பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்கு சென்று மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பேசி, ராகுல்காந்தி அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார்.