Rahul Gandhi Gift: அம்மாவுக்கு 'குட்டி' சர்ப்ரைஸ்: ராகுல் காந்தி பரிசை பார்த்து வியந்த சோனியா காந்தி
உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு செல்ல நாய் ஒன்றை, தனது தாயாருக்கு அன்பு பரிசாக வழங்கியுள்ளார் ராகுல் காந்தி.
கடந்த 9 ஆண்டுகளாக, காங்கிரஸ் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. தோல்வியில் இருந்து கட்சியை மீட்டெக்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர் முயற்சிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, 146 நாள்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டார்.
நடைபயணத்தில் பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்தாண்டின் இறுதியில் 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும் அடுத்தாண்டு ஏப்ரல் மே மாதங்களில் மக்களவை தேர்தலும் நடத்தப்பட உள்ள நிலையில், ராகுல் காந்தி பிஸியாக இருந்து வருகிறார்.
சோனியா காந்திக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ராகுல் காந்தி:
பொது வாழ்க்கையில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவ்வப்போது கவனம் செலுத்தி வருகிறார். தனது தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தியுடனும் அவர் அவ்வப்போது நேரம் செலவழித்து வருகிறார். இச்சூழலில், சோனியா காந்திக்கு அவர் பரிசு ஒன்றை அளித்துள்ளார்.
உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு செல்ல நாய் ஒன்றை, தனது தாயாருக்கு அன்பு பரிசாக வழங்கியுள்ளார் ராகுல் காந்தி. சோனியா காந்தியை சர்ப்ரைஸ் செய்யும் ராகுல் காந்தியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. பரிசு குறித்து ராகுல் காந்தி பேசுவதுடன் அந்த வீடியோ தொடங்குகிறது.
சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக வீட்டின் உள்ளே இருக்கும் சோனியா காந்தியை ராகுல் காந்தி வெளியே அழைப்பதும் வெளியே வரும் சோனியா காந்தி, அங்கு இருக்கும் பெட்டியை திறக்கிறார். மனதைக் கவரும் இந்த காட்சிகள் அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
மகிழ்ச்சியில் பூரித்துபோன சோனியா காந்தி:
பெட்டியை திறந்தவுடன் அதில் நாய்க்குட்டி ஒன்று இருக்கிறது. இந்த நாய்க்கு நூரி என ராகுல் காந்தி பெயர் சூட்டியுள்ளார். அதை பார்த்தவுடன் மகிழ்ச்சியில் பூரித்த சோனியா காந்தி, 'சோ க்யூட்' என சொல்கிறார். இந்த வீடியோ, ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
"எங்கள் குடும்பத்தின் புதிய, அழகான உறுப்பினரை நீங்கள் அனைவரும் சந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எங்கள் குட்டி நாய், நூரி. கோவாவிலிருந்து நேராக எங்கள் கைகளுக்கு பறந்து வந்து, எங்கள் வாழ்க்கையின் ஒளியாக மாறினாள். நிபந்தனையற்ற அன்பு மற்றும் சமரசமற்ற விசுவாசம்.
இந்த அழகான விலங்கு நமக்கு கற்பிப்பதற்கு நிறைய இருக்கிறது. அனைத்து உயிரினங்களுடனும் நமது அன்பைப் பாதுகாப்பதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் நாம் உறுதியளிக்க வேண்டும்" என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம், கோவா சென்ற ராகுல் காந்தி, ஜாக் ரஸ்ஸல் டெரியர் வகை நாய்க்குட்டியை வாங்கி வந்தார். வடக்கு கோவாவின் மபுசாவில் உள்ள நாய் கூடத்தில் இருந்து இந்த நாய் தத்தெடுக்கப்பட்டுள்ளது.