இந்தியாவுக்கு எதிராக பேசினாரா ராகுல் காந்தி? பொங்கிய நிர்மலா சீதாராமன்!
இந்தியாவுக்கு எதிராக போராடுவதாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு நிர்மலா சீதாராமன், நட்டா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை மட்டுமல்ல, இந்திய அரசு இயந்திரத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராடுவதாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு பாஜக கடும் எதிர்வினையாற்றியுள்ளது. இந்திய அரசுக்கு எதிராக போராடுவதாக நினைத்தால், அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை ஏன் ஏந்தி செல்ல வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசி இருக்கிறார்.
என்ன பேசினார் ராகுல் காந்தி?
இதுபோன்று அவர் வேறு நாட்டில் பேசியிருந்தால் அவரை கைது செய்திருப்பார்கள். இப்படி கூறுவது தேச துரோகம். ஏனென்றால், அரசியலமைப்புச் சட்டம் செல்லாது, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியது எல்லாம் செல்லாது, இதைப் பகிரங்கமாகச் சொல்லும் துணிச்சல் அவருக்கு இருக்கிறது. வேறு எந்த நாடாக இருந்திருந்தாலும் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பார். பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை மட்டுமல்ல, இந்திய அரசு இயந்திரத்தை எதிர்த்தே எதிர்க்கட்சிகள் போராடுகிறது" என்றார்.
இந்திய அரசு இயந்திரத்தை எதிர்த்து போராடுவதாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு பாஜக கடும் எதிர்வினையாற்றி வருகிறது. இதை விமர்சித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "இந்திய அரசுக்கு எதிராக போராடுவதாக நினைத்தால், அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை ஏன் ஏந்தி செல்ல வேண்டும்" என கேள்வி எழுப்பினார்.
"அர்பன் நக்சல்களுடன் தொடர்பு"
ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான நட்டா, "மறைக்காமல் வெளிப்படுத்திவிட்டார்கள். காங்கிரஸின் அசிங்கமான உண்மை இப்போது அவர்களின் சொந்த தலைவரால் அம்பலமாகிவிட்டது.
தேசத்திற்குத் தெரிந்ததைத் தெளிவாகச் சொன்னதற்காக ராகுல் காந்தியை நான் பாராட்டுகிறேன். அவர் இந்திய அரசையே எதிர்த்துப் போராடுகிறார். இந்தியா மீது அவதூறு பரப்ப விரும்பும், இழிவுபடுத்தும் அர்பன் நக்சல்கள் மற்றும் சுய நலத்துடன் செயல்படும் அமைப்புகளுடன் ராகுல் காந்தி மற்றும் அவரை சுற்றி இருப்பவர்கள் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளனர் என்பது ரகசியமல்ல.
அவரது தொடர்ச்சியான செயல்களும் இந்த நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளன. அவர் செய்தவை அல்லது பேசியவை அனைத்தும் இந்தியாவை உடைத்து நம் சமூகத்தை பிளவுபடுத்தும் திசையில் உள்ளன" என்றார்.