Polling begins in Bhabanipur | முதல்வர் பதவியைத் தக்கவைப்பாரா மம்தா பேனர்ஜி? பாபனிபூர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடக்கம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவர் கூட, அமைச்சர் பதவியை ஏற்கலாம்.
மேற்குவங்க சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் காலியாக உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் செப்டம்பர் 30-ஆம் தேதி (இன்று) நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பாபனிபூர், சம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஒரிசா மாநிலத்தில் உள்ள பிப்லி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
#WestBengalBypolls | Polling begins in Bhabanipur, polling is scheduled to end at 6:30 pm, according to State CEO
— ANI (@ANI) September 30, 2021
(Visuals from Mitra Institution polling booth) pic.twitter.com/fgW9fvMsbb
பாபனிபூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே மம்தா பேனர்ஜி தனது முதல்வர் பதவியைத் தொடர்ந்து தக்கவைக்க முடியும் என்பதால், மிகத்தீவிர பிரசாரத்தை மம்தா மேற்கொண்டார். இத்தொகுதியில், சமூகத்தின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த மக்கள் வாக்களார்களாக உள்ளனர். உதாரணமாக, 40% வாக்களார்கள் குஜராத்தி, மார்வாடி, பீகாரி,சீக்கியர்கள் ஆகிய புலம்பெயர் மக்கள்களாக உள்ளனர். இஸ்லாம் மக்கள்தொகையின் எண்ணிக்கை 20% ஆக உள்ளது.
முன்னதாக, தனது பிரச்சாரத்தை அத்தொகுதியில் உள்ள சோலா அனா மசூதியிலிருந்து துவங்கிய மம்தா, பல்வேறு உத்திகளையும் பயன்படுத்தினார். பெங்காலி இந்து மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் கோயிலுக்கு சென்றும், பெங்காலி மொழியிலும் தேர்தல் பிராச்சாரத்தை மேற்கொண்டார். சீக்கிய சமயத்தினர் அதிகம் வாழும் பகுதிகளில் குருத்வாராவுக்கு சென்று பொது மக்களுடன் கலந்துரையாடினார்.
இந்தி, வங்காளம் ஆகிய மொழிகளுடன் உருது மொழி வார்த்தைகளைக் கலந்துபேசிய மம்தா பானர்ஜி, `நான் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டேன். எனினும் என்னை வீழ்த்த மிகப்பெரிய சதி நிகழ்ந்தது. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. என்னுடைய விதியின் பலனாக, மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளேன்’ என்று குறிப்பிட்டார்.
இடைத்தேர்தல் என்பதைத் தாண்டி, தேசிய அரசியலில் கால் பதிக்கும் நடவடிக்கையின் ஒரு முன்னோட்டமாகவே மம்தா பேனர்ஜி இந்த இடைத்தேர்தலை கருதுகிறார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிகின்றன.
முக்கியத்துவம் பெறும் பாபனிபூர் இடைத்தேர்தல்:
27 மார்ச் 2021 முதல் 29 ஏப்ரல் 2021 முடிய எட்டு கட்டங்களாக மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா ஒரு கூட்டணியாகவும், பொதுவுடமைக் கட்சிகள் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மகாஜோத் எனும் பெயரில் கூட்டணியாகவும், பாரதிய ஜனதா கட்சி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி என மும்முனை போட்டி நிலவியது. அனைத்துக் கருத்துக் கணிப்புகளையும் மீறி மம்தா பானர்ஜி தலைமையிலான அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு, தேர்தல் நடைபெற்ற 292 தொகுதிகளில், 213 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது.
இருந்தாலும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பேனர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியைத் தழுவினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவர் கூட, அமைச்சர் பதவியை ஏற்கலாம். ஆனால், அந்த அமைச்சர் மாநிலத்தின் இரண்டு அவைகளில் எதிலும் ஆறுமாதக் காலத்திற்குள் உறுப்பினராக வேண்டும். இல்லாவிடில், ஆறுமாதக் காலளவு கழிவுற்றதும் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும். இதனைத்தொடர்ந்து, பபானிபூர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவருக்கு போட்டியாக அந்த மாநில எதிர்க்கட்சியான பா.ஜ.க. பிரியங்கா திபெர்வால் என்ற பெண்ணை வேட்பாளராக களமிறக்கியுள்ளது
காலை 7 மணிக்குத் தொடங்கப்பட்ட தேர்தல் வாக்குப்பதிவு, மாலை 6.30 மணி வரை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாசிக்க
பிரசாந்த் கிஷோர்-ராகுல் சந்திப்பு... சோனியாவை சந்திக்க மம்தா டெல்லி பயணம்..திட்டம் என்ன?