West Bengal Poll Violence: மேற்கு வங்காள தேர்தலுக்கு பின்னான வன்முறை : சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு..
இக்குழு வன்முறை நடைபெற்ற இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு தங்கள் அறிக்கையை கடந்த ஜூலை 13-ஆம் தேதியன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் சமர்பித்தது
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் குறித்து சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பான மற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்புக் குழுவையும் நீதிமன்றம் அமைத்துள்ளது.
27 மார்ச் 2021 முதல் 29 ஏப்ரல் 2021 முடிய எட்டு கட்டங்களாக மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா ஒரு கூட்டணியாகவும், பொதுவுடமைக் கட்சிகள் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மகாஜோத் எனும் பெயரில் கூட்டணியாகவும், பாரதிய ஜனதா கட்சி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி என மும்முனை போட்டி நிலவியது. அனைத்துக் கருத்துக் கணிப்புகளையும் மீறி மம்தா பானர்ஜி தலைமையிலான அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு, தேர்தல் நடைபெற்ற 292 தொகுதிகளில், 213 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது.
ஆனால், தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெறத் தொடங்கின. 10-க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் பலியானதாக பல்வேறு செய்தி அறிக்கைகள் தெரிவித்தன. திரிணாமூல் கட்சியினர் பாரதிய ஜனதா அலுவலகத்தை அடித்து நொறுக்குவதாக பாஜகவினர் புகார் செய்யத் தொடங்கினார்கள். மம்தாவுக்கு எதிராக நின்று வெற்றிபெற்ற சுவேந்து அதிகாரி தாக்கப்படும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வலம்வரத் தொடங்கின. சில பாரதிய ஜனதா அலுவலகம் தீயிட்டுக் கொளுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
திரிணாமுலும் தன் பங்குக்கு கட்சி உறுப்பினர்கள் மூன்று பேர் கலவரத்தில் இறந்ததாக புகார் செய்தது. மேற்கு வங்காள மார்க்சிஸ்ட் அலுவலகமும் தாக்கப்பட்டதாகப் புகார்கள் வந்தன. தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் குறித்து ஆய்வு செய்ய மேற்கு வங்க மாநிலத்திற்கு 4 பேர் கொண்ட குழுவை அம்மாநிலத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியது.
மேலும், தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை குறித்து விசாரிக்க ஏழு பேர்கொண்ட குழுவை தேசிய மனித உரிமை ஆணையம் நியமித்துது. இக்குழு வன்முறை நடைபெற்ற இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு தங்கள் அறிக்கையை கடந்த ஜூலை 13ம் தேதியன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் சமர்பித்தது.
மனிதத் தன்மையற்ற, கொடூரமான குற்றங்கள் நடை பெற்றுள்ளதாகவும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் குழு தனது அறிக்கையில் தெரிவித்தது. மேலும், மாநில காவல்துறை வன்முறை சம்பவங்களுக்கு உடந்தையாக இருக்காவிட்டாலும், வன்முறை சம்பவங்களை கையாள்வதில் முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாக தெரிவித்தது.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், "இந்த குழவில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் பாஜகவுடன் நேரடி தொடர்பில் இருப்பதாகவும், மத்திய அரசுடன் இணக்கமான உறவை பேணி வருவதாகவும் தெரிவித்தது. மேலும், மாநில அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான, உள்நோக்கத்துடன் கூடிய பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. தேசிய மனித உரிமை ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்ற கூற்றுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
மேலும், வாசிக்க: