Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
அம்பேத்கரும், பெரியாரும் ஒன்றா? இருவருக்கும் ஒன்றாக சிலை வைத்தாலும் சிந்தனைகள் வேறு என்று சீமான் பேசியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசிய கருத்து பெரும் பரபரப்பை தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இன்று சென்னையில் சீமான் நிருபர்களைச் சந்தித்தார்.
அம்பேத்கரும், பெரியாரும் ஒன்றா?
அப்போது, அவர் கூறியதாவது, "மொழி, தேசம் இல்லாவிட்டால் யாருக்காக போராடினீர்கள்? என்ன உங்கள் சமூக சீர்த்திருத்தம்? அம்பேத்கரும், பெரியாரும் என்று கூறுகிறீர்கள். அம்பேத்கரும், பெரியாரும் சிலை ஒன்றாக வைப்பீர்கள். சிந்தனை ஒன்றாக வைக்க முடியுமா?
அதிகாரம் மிக வலிமையானது. அனைத்து துன்ப போற்றுதலுக்கும் காரணமானது ஆட்சி அதிகாரம் மட்டுமே என்றவர் அம்பேத்கர். இவர் கற்பி, புரட்சி செய், ஒன்று சேரடா என்று சொல்கிறார். அரசியல் வலிமை, அரசியல் அதிகாரத்தை நோக்கி போங்கள் என்று அம்பேத்கர் சொல்கிறார்.
அடிப்படையே வேறு:
தேர்தல் பாதை, திருட்டு பாதை என்கிறார் பெரியார். ஓட்டுப் பொறுக்கிகள் போகாதே. அடிப்படையே இருவரும் 5 ஆயிரம் கி.மீட்டர் தொலைவு. வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள் ஒரு நாள் தங்கள் வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள் என்றார் அண்ணல் அம்பேத்கர். ஒடுக்கப்பட்ட இனத்தின் மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்று அம்பேத்கர் கூறுகிறார்.
பெரியாருக்கு இனமே கிடையாது. ஒருவன் அடிமையாக இருப்பதை உணர்த்திவிடு. பிறகு அவனே கிளர்ச்சி செய்து போராடுவான் என்கிறார் அம்பேத்கர். அப்படி ஏதும் நீங்கள் உணர்த்தினீர்களா? ஒரு தடவை என்னை ஒருவன் போடா என்று கூறிவிட்டேன். பெரியாரை இப்படி பேசலாமா? என்கிறார்கள்.
பெரியார் இப்படி பேசலாமா?
நாங்களும் பெரியார் இப்படி பேசலாமா? தமிழைச் சனியன் என்றும், பிச்சை எடுக்க முடியாது என்றும், திருவள்ளுவன் ஒரு பைத்தியக்காரன், ஆரிய அடிமை, தொல்காப்பியன் ஒரு பைத்தியக்காரன், ஆரிய அடிமை என பேசியுள்ளார். தமிழ் சனியன், காட்டுமிராண்டி மொழி, அதைப் படித்தால் பிச்சைக்கூட எடுக்க முடியாது என்றார். எதற்கு தமிழிலே பேசி, தமிழிலே எழுதினீர்கள். பிச்சை எடுக்கவா? ஆங்கிலத்தில் எழுத வேண்டியது தானே."
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ் தேசியத்தை முன்னெடுத்து அரசியல் கொள்கைகளைப் பரப்பி வரும் சீமான், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியார் குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சீமானின் இந்த பேச்சுக்கு தி.மு.க., அ,தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சீமான் மீண்டும் அம்பேத்கர், பெரியார் இருவரையும் ஒப்பிட்டு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

