ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
டெல்லியில் கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் ஒரு தொகுதியை கூட வெல்லாத காங்கிரஸ், இம்முறை தாக்கத்தை ஏற்படுத்த பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது.

டெல்லியில் ஆட்சி அமைத்தால் வேலையில்லா இளைஞர்களுக்கு ஓராண்டுக்கு 8,500 ரூபாய் வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. டெல்லியில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் வேளையில் சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பால், அங்கு அரசியல் களம் மேலும் சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே பிரதான அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.
டெல்லி தேர்தலில் வெற்றி யாருக்கு?
டெல்லியை பொறுத்தவரையில், சட்டமன்ற தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் இணைந்து களம் கண்ட ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ், சட்டமன்ற தேர்தலை தனித்தனியே சந்திக்கின்றன. இவர்களை தவிர மத்தியில் ஆளும் பாஜக இந்த இரண்டு கட்சிகளும் கடும் போட்டியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் ஒரு தொகுதியை கூட வெல்லாத காங்கிரஸ், இம்முறை தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அந்த வகையில், வேலையில்லா இளைஞர்களுக்கு அசத்தலான திட்டத்தை அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதி:
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட் கூறுகையில், "நிறுவனத்திலோ தொழிற்சாலையிலோ தங்கள் திறமையை வெளிக்காட்டும் இளைஞர்களுக்கு நாங்கள் நிதி உதவி வழங்குவோம். இந்த நிறுவனங்கள் மூலம் அவர்களுக்கு பணம் கிடைக்கும். இது வீட்டில் உட்கார்ந்து பணம் பெறும் திட்டம் அல்ல.
பயிற்சி பெற்ற துறைகளை மக்கள் உள்வாங்க வேண்டும் என்று முயற்சிப்போம். அதனால் அவர்களால், அவர்களின் திறமையை மேம்படுத்த முடியும்" என்றார்.
கடந்த ஜனவரி 6 ஆம் தேதி, 'பியாரி திதி யோஜனா' என்ற திட்டத்தை காங்கிரஸ் அறிவித்தது. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்படும் என்று உறுதியளித்தது. கடந்த ஜனவரி 8 ஆம் தேதி, 'ஜீவன் ரக்ஷா யோஜனா' என்ற திட்டத்தை காங்கிரஸ் அறிவித்தது. இதன் கீழ் ரூ. 25 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்குவதாக உறுதியளித்தது.
இதையும் படிக்க: Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

