(Source: ECI/ABP News/ABP Majha)
இது தேவைதானா? வெளிநாட்டில் திருமணம் செய்யாதீங்க... பிரதமர் மோடி கொடுத்த அட்வைஸ்
அமெரிக்க, பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று, இந்திய இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வது ட்ரெண்டாக மாறியள்ளது.
சமீப காலமாக, வெளிநாட்டில் திருமணம் செய்யும் போக்கு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்க, பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று இந்திய இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வது ட்ரெண்டாக மாறியள்ளது.
வெளிநாட்டில் திருமணம் செய்யும் போக்கு அதிகரிப்பு:
இந்த நிலையில், இந்தியர்கள் வெளிநாட்டில் திருமணம் செய்து கொள்வதை தவிர்க்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், "தற்போது திருமண சீசன் தொடங்கியுள்ளது. இந்த திருமண சீசனில் சுமார் ரூ.5 லட்சம் கோடி வர்த்தகம் நடக்கும் என சில வர்த்தக அமைப்புகள் கணித்துள்ளன.
திருமணங்களுக்கு ஷாப்பிங் செய்யும் போது, நீங்கள் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆம், திருமணம் என்ற தலைப்பில் பேச தொடங்கியதால், இந்த விஷயத்தை சொல்கிறேன். எனக்கு நீண்ட காலமாக ஒரு விஷயம் வருத்தத்தை தருகிறது.
என் மனதில் இருக்கும் வலியை என் குடும்ப உறுப்பினர்களிடம் நான் வெளிப்படுத்தவில்லை என்றால், நான் அதை வேறு யாரிடம் போய் சொல்வேன்? சற்று யோசித்துப் பாருங்கள். சமீப காலமாக, சில குடும்பங்கள் வெளியூர் சென்று திருமணங்களை நடத்தும் புதிய ட்ரெண்ட் உருவாகி வருகிறது. இது தேவையா?
பிரதமர் மோடி கொடுத்த அட்வைஸ்:
இந்திய மண்ணில் நாட்டு மக்கள் மத்தியில் திருமண விழாக்களை மக்கள் நடத்தினால், நாட்டின் பணம் நாட்டிலேயே தங்கும். வெளியே செல்லாது. இந்தியாவில் திருமணத்தை நடத்துவதால் நம் நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். உங்கள் திருமணத்தைப் பற்றி ஏழைகள் கூட தங்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்கள். உள்ளூர் பொருள்களுக்கு ஆதரவு தருவதை உங்களால் இன்னும் விரிவுபடுத்த முடியும் அல்லவா? நம் நாட்டில் ஏன் இதுபோன்ற திருமண விழாக்களை நடத்தக்கூடாது?
நீங்கள் விரும்பும் அமைப்பு இன்று இல்லாமல் இருக்கலாம். ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தினால் அமைப்புகள் வளரும். பெரிய பணக்கார குடும்பங்களை பற்றி பேசுகிறேன். என்னுடைய இந்த வலி நிச்சயம் அந்த பெரிய குடும்பங்களை சென்றடையும் என்று நம்புகிறேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரிய அளவில் மக்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள். நம் நாடு முன்னேறுவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இன்று இந்தியாவில் 140 கோடி மக்களால் பல மாற்றங்கள் நடைபெறுவது தெளிவாகத் தெரிகிறது. இதற்கான நேரடி உதாரணத்தை இந்த பண்டிகைக் காலத்தில் பார்த்தோம்.
கடந்த மாதம் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் உள்ளூர் பொருட்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினேன். நான் சொல்லி ஒரு சில நாட்களில், தீபாவளி, சாத் ஆகிய பண்டிகைகளில் நாட்டில் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளது. இந்த காலகட்டத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதில் மக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் காணப்பட்டது" என்றார்.
இதையும் படிக்க: Constitution Day: காலம் கடந்து நிற்கும் இந்திய அரசியலமைப்பு: மக்களின் மனசாட்சியாக மாறியது எப்படி?