Constitution Day: காலம் கடந்து நிற்கும் இந்திய அரசியலமைப்பு: மக்களின் மனசாட்சியாக மாறியது எப்படி?
ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த ஒவ்வொரு சீர்திருத்தத்தாலும் மக்களிடம் புதிய புதிய கோரிக்கைகள் எழுந்தன. அவை, உரிமைகளுக்கான போராட்டங்களாக வெடித்தன. மக்களின் எதிர்ப்பின் வழியாக அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.
கடந்த 1949ஆம் ஆண்டு, நவம்பர் 26ஆம் தேதி, நமது அரசியலமைப்பை அரசியல் நிர்ணய சபை ஏற்று கொண்டது. இதை குறிக்கும் வகையில், அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 74 ஆண்டுகளாக பல சவால்களை கடந்து, இந்திய அரசியலமைப்பு தாங்கி நிற்கிறது. நாட்டின் அடையாளமாக கருதப்படும் அரசியலமைப்பு நீண்ட காலம் தாங்கி நிற்பது எல்லாம் அரிதான நிகழ்வு. மக்களின் உரிமைகளை நிலைநாட்டி அரிதான ஆவணத்தை அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் எப்படி தயாரித்தார்கள் என்பதை தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்.
இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் எழுதப்பட்ட அரசியலமைப்பு:
அரசியலமைப்பை உருவாக்குவது என்பதே எளிதான காரியம் அல்ல. கடந்த 1789ஆம் ஆண்டு தொடங்கி 2005ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 806 அரசியலமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில், 148 அரசியலமைப்புகளை எடுத்துக்காட்டாக எடுத்து கொண்டால் ஒவ்வொரு அரசியலமைப்பையும் தயாரிக்க சராசரியாக 16 மாதங்கள் ஆகியுள்ளது. ஆனால், இந்தியாவில் அரசியலமைப்பு தயாரிக்க கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆனது. கடந்த 1946ஆம் ஆண்டு தொடங்கிய பணி, 1949ஆம் ஆண்டுதான் நிறைவுபெற்றது.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில்தான் அரசியலமைப்பு எழுதப்பட்டது. தேச பிரிவினை காரணமாக எல்லையின் இருபுறமும் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. கொடூரமான சம்பவங்கள் அரங்கேறின.
இதற்கு மத்தியில் டெல்லிக்கு அகதிகள் படையெடுத்த வண்ணம் இருந்தனர். இப்படிப்பட்ட சூழலில்தான், காலையில் நாடாளுமன்றமாக இயங்கிய கட்டிடம் மதியம் அரசியல் நிர்ணய சபை கூட்டத்தை நடத்துவதற்காக பயன்பட்டது. அங்குதான், காலத்தை கடந்து நிற்கும் அரசியலமைப்பு வரைவு தயாரிக்கப்பட்டது. கொந்தளிப்பான நிகழ்காலத்துக்கு பொருந்தும் வகையில் மட்டும் இல்லாமல் எதிர்கால சந்ததியினரை கருதியும் சட்டங்கள் எழுதப்பட்டன.
வரலாற்றை சொல்லும் ஆவணம்:
அரசியல் ரீதியாக மட்டும் இன்றி வரலாற்று ரீதியாகவும் ஏற்று கொள்ளும் வகையில் நாட்டை உருவாக்கினால்தான் அதன் அரசியலமைப்பை மக்கள் ஏற்று கொண்டு நடப்பார்கள். அரசியலமைப்பு என்பது எழுத்துகள் மட்டும் அல்ல. அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட வரலாற்றை சொல்லும் ஆவணம். தேசத்தின் அடையாளத்தை உலக நாடுகளுக்கு தெரியப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
அரசியல் சாசன சபை உறுப்பினர்களாக இருந்த தேச தலைவர்கள் மீது மக்கள் கொண்டிருந்த பற்று, அரசியலமைப்பை மக்கள் ஏற்று கொள்வதற்கு காரணமாக அமைந்தது. மக்களின் விருப்பத்தை அரசியலமைப்பு எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதையும், அதன் சமத்துவ அடித்தளம் எவ்வாறு சிறந்த தேசத்தை உருவாக்கும் என்பதையும் இவை எடுத்துரைக்கின்றன.
சுதந்திர போராட்டமும், காலனி ஆதிக்கத்துக்கு எதிரான எதிர்ப்பும் அரசியலமைப்பின் அடிப்படையாக மாறியது. இந்தியா அரசியலமைப்புக்கு ஒரு தனித்துவம் உள்ளது. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த ஒவ்வொரு சீர்திருத்தத்தாலும் மக்களிடம் புதிய புதிய கோரிக்கைகள் எழுந்தன. அவை, உரிமைகளுக்கான போராட்டங்களாக வெடித்தன. மக்களின் எதிர்ப்பின் வழியாக இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.
பல காலக்கட்டங்களில் முன்வைக்கப்பட்ட உரிமைகள் அரசியலமைப்பின் அடிப்படைகளாக மாறின. பேச்சுரிமை, சுதந்திரமான ஊடகம், சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஆகிய கொள்கைகள் கடந்த 1895ஆம் ஆண்டு திலகர் கொண்டு வந்த சுவராஜ் மசோதாவில் இடம்பெற்றிருந்தது. இந்திய அரசு சட்டம் 1919இல் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், சுதந்திரமான ஊடகம் ஆகியவற்றுடன் அரசியல் உரிமைகளும் இடம்பெற வேண்டும் என இந்திய தேசிய காங்கிரஸ் வலியுறுத்தியது. இவை அனைத்தும், சோவியத் ஒன்றியத்தில் நிறைவேறப்பட்ட உரிமைகள் பிரகடனத்தில் இடம்பெற்றிருந்தது.
மக்களின் மனசாட்சி:
கடந்த 1931ஆம் ஆண்டு, காங்கிரஸின் கராச்சி மாநாட்டில் அடிப்படை உரிமைகள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. "மக்களைச் சுரண்டுவதை முடிவுக்குக் கொண்டுவர, அரசியல் சுதந்திரம் என்பது பொருளாதார சுதந்திரத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டது. அடிப்படை உரிமைகளுடன் பொருளாதார சுதந்திரத்தை வழங்க வேண்டும் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் கொத்தடிமைகள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு முடிவு கட்டப்படும். இலவச ஆரம்பக் கல்வியை வழங்குவது, தொழிலாளர் நலனை விரிவாக்கம் செய்வது, தொழிலாளர் சங்கங்களை பலப்படுத்துவது, பெண்களை பணி அமர்த்துவது ஆகியவை கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டன. முக்கிய தொழில்துறைகள் மற்றும் தேசிய வளங்களை தன் கட்டுப்பாட்டின் கீழ் அரசு கொண்டு வந்து வளங்களை மறுபங்கீடு செய்ய வேண்டும். வகுப்புவாத பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. இவை அனைத்தும் அரசியலமைப்பு இரண்டாவது பாகத்தில் அடிப்படை உரிமைகளாகவும் நான்காவது பாகத்தில் அரசு கொள்கையினை நெறிபடுத்தும் கோட்பாடுகளாக சேர்க்கப்பட்டது. இதன் மூலம், இந்திய அரசு சட்டம், 1935இலிருந்து மட்டுமே அரசியமைப்பு உருவாக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.
அரசியல் நிர்ணய சபையில் பேச்சுவார்த்தையின் மூலம் அனைவரின் சம்மதம் பெற்று, நமது அரசியலமைப்பை உருவாக்கியதால்தான் அது, காலம் கடந்து தனித்து நிற்கிறது. ஒரு மித்த கருத்து உருவானதால்தான், அரசியலமைப்புக்கான அதிகாரம் கிடைத்தது. இதற்கு, ஒரு நிகழ்வை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டாக வேண்டும். இந்தியை தேசிய மொழியாக ஏற்று கொள்வது தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசிய அரசியல் நிர்ணய சபையின் தலைவர் ராஜேந்திர பிரசாத், "தேசிய மொழி தேர்வு என்பது முழு நாட்டினாலும் மேற்கொள்ளப்பட வேண்டும். சபையின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஒரு முடிவை எடுத்து, அதை மக்களில் ஒரு பிரிவினர் அங்கீகரிக்கவில்லை என்றால் அது ஆபத்தாக மாறிவிடும்" என்றார். எனவேதான், நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தியும் அலுவல் மொழியாக ஆங்கிலமும் தேர்வு செய்யப்பட்டது.
இப்படி, பல நேரங்களில் சமரசம் செய்யப்பட்டு ஒருமித்த கருத்தை எட்டிய பிறகே அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.