"ஃபிட்டாக இருக்க என்ன செய்ய வேண்டும்" அட்வைஸ் கொடுத்த பிரதமர் மோடி
இந்தாண்டின் கடைசி மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசியுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு, நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாடி வருகிறார்.
பல முக்கிய முக்கிய விவகாரங்கள் குறித்தும் உத்வேகம் அளிக்கும் நிஜ வாழ்க்கை ஹீரோக்கள் குறித்தும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்த சூழலில், இந்தாண்டின் கடைசி மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பட்டது. அதில் பேசிய அவர், "இன்றைய நிகழ்ச்சிக்காக ஃபிட் இந்தியா தொடர்பான தங்களின் கருத்துகளை அனுப்புமாறு கேட்டுக் கொண்டேன்.
"புதுமைகளின் மையமாக இந்தியா மாறி வருகிறது"
உங்கள் பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நமோ செயலியில் பல ஸ்டார்ட்அப்களும் எனக்கு பல பரிந்துரைகளை அனுப்பியுள்ளன. அவர்கள் தங்கள் தனித்துவமான முயற்சிகளைப் பற்றி பேசினர். இந்தியாவின் முயற்சியால், 2023 சர்வதேச தினை ஆண்டாக கொண்டாடப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
'புதுமைகளின் மையமாக' இந்தியா மாறி வருகிறது. இங்கேயே நிற்கப் போவதில்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. 2015 ஆம் ஆண்டில், உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் நாம் 81 வது இடத்தில் இருந்தோம். இன்று தரவரிசையில் 40ஆவது இடத்தில் இருக்கிறோம்.
காசி-தமிழ் சங்கமத்தில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் தமிழ்நாட்டிலிருந்து காசியை அடைந்துள்ளனர் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அங்கு முதன்முறையாக, பொது மேடையில் மக்களுடன் தொடர்புகொள்வதற்காக, 'பாஷினி' என்ற ஏஐ (செயற்கை நுண்ணறிவு) கருவியைப் பயன்படுத்தினேன். நான் இந்தியில் உரையாற்றினேன்.
"பல சாதனைகளை புரிந்த இந்தியா"
தமிழ்நாட்டு மக்கள் நிகழ்நேரத்தில் நான் பேசுவதை தமிழ் மொழியில் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நிகழ்நேர மொழிபெயர்ப்பு தொடர்பான ஏஐ கருவிகளை ஆராய இன்றைய இளம் தலைமுறையினரை நான் கேட்டுக்கொள்கிறேன்.
உடல் ஆரோக்கியத்தில் ஆர்வம் அதிகரிப்பது, இத்துறையில் பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தேவையை அதிகரிக்க வழிவகுக்கிறது. 'JOGO டெக்னாலஜிஸ்' போன்ற ஸ்டார்ட் அப்கள் இந்த தேவையை பூர்த்தி செய்ய உதவுகின்றன. ஃபிட் இந்தியா கனவை நனவாக்குவதில் பங்களிக்கும் புதுமையான ஹெல்த்கேர் ஸ்டார்ட் அப்கள் பற்றி எனக்கு தொடர்ந்து எழுதுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த ஆண்டு முழுவதும் பெறப்பட்ட அபரிமிதமான மக்களின் பங்கேற்பிற்கும் உத்வேகத்திற்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். வளர்ச்சி மற்றும் தன்னம்பிக்கை உணர்வால் நாடு ஊக்கம் அடைகிறது. 2024 ஆம் ஆண்டிலும் இந்த உணர்வையும் வேகத்தையும் பராமரிக்க வேண்டும். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியது உட்பட பல சிறப்பு சாதனைகளை இந்த ஆண்டு இந்தியா புரிந்துள்ளது" என்றார்.