(Source: ECI/ABP News/ABP Majha)
குஜராத்தில் விரைவில் விமான தயாரிப்பு... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி...!
மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். அங்கு டிசம்பர் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
குஜராத்தில் விமானங்கள் விரைவில் தயாரிக்கப்படும் என்றும், அவற்றின் உதிரி பாகங்கள் மாநிலத்தின் ராஜ்கோட்டில் தயாரிக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். அங்கு டிசம்பர் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் ராஜ்கோட் நகரின் ரேஸ் கோர்ஸ் பகுதியில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான வீடுகள் உள்ளிட்ட பல நலதிட்டங்களைத் தொடங்கி வைத்த பின்னர் அவர் கூட்டத்தில் உரையாற்றினார்.
ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள பொறியியல் தொழிற்சாலையை பாராட்டி பேசிய மோடி, விரைவில் குஜராத்தில் விமானங்கள் தயாரிக்கப்படும் என்றும், அவற்றின் உதிரி பாகங்கள் ராஜ்கோட்டில் தயாரிக்கப்படும் என்றும் கூறினார். சில தலைவர்கள் அரசியலுக்கு வந்த பிறகு தங்களுக்கென்று பங்களாக்கள் கட்டிக் கொண்டார்கள், ஆனால் ஏழைகளுக்கு எதுவும் செய்யவில்லை என்று யாரையும் குறிப்பிடாமல் அவர் விமர்சித்தார்.
இதுகுறித்து விரிவாக பேசிய பிரதமர் மோடி, "அவர்கள் அரசியலுக்கு வந்து தங்களுக்கு என பங்களாக்களை கட்டி கொண்டனர். ஆனால், சேரிகளில் வசிப்பவர்களின் நிலைமையை மேம்படுத்த நினைக்கவில்லை. நான் ஏழைகளுக்கு வீடு கட்டும் பணியை மேற்கொண்டுள்ளேன்" என்றார்.
இந்நிகழ்வில், 'லைட் ஹவுஸ்' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சுமார் 1,100 வீடுகளின் உடைமைகளை பயனாளிகளுக்கு அவர் வழங்கினார். முன்னதாக, விமான நிலையத்தில் இருந்து ரேஸ் கோர்ஸ் மைதானம் வரை மக்கள் மத்தியில் பிரதமர் மோடி சாலையில் பேரணி சென்றார்.
முன்னதாக, குஜராத்திற்குள் மாற்று வேடத்தில் நுழைய அர்பன் நக்சல்கள் முயன்று வருவதாக ஆம் ஆத்மி கட்சியை மோடி மறைமுகமாக விமர்சித்திருந்தார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "அர்பன் நக்சல்கள் புதிய தோற்றத்துடன் மாநிலத்திற்குள் நுழைய முயற்சிக்கிறார்கள். அவர்கள் தங்கள் உடைகளை மாற்றிக்கொண்டனர். அவர்கள் எங்கள் அப்பாவி மற்றும் ஆற்றல் மிக்க இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார்கள்
அர்பன் நக்சல்கள் மேலிருந்து கால் பதிக்கிறார்கள். அவர்கள் நம் இளம் தலைமுறையை அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நாட்டை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அர்பன் நக்சல்களுக்கு எதிராக நமது குழந்தைகளை எச்சரிக்க வேண்டும். அவர்கள் அந்நிய சக்திகளின் முகவர்கள். அவர்களுக்கு எதிராக குஜராத் தலை குனியாது, குஜராத் அவர்களை அழித்துவிடும்" என்றார்.
குஜராத்தில் கடந்த 24 ஆண்டுகளாக பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது. மற்ற தேர்தல்களை ஒப்பிடுகையில் கடைசி தேர்தலில், பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் சவால் அளித்தது. இருப்பினும், 182 தொகுதிகளில் 99 தொகுதிகளில் வென்று பாஜக ஆட்சி அமைத்தது. குஜராத் முதலமைச்சராக பொறுப்பு வகித்த மோடி, பிரதமரான பிறகான 8 ஆண்டுகளில், குஜராத்தில் மூன்று முதலமைச்சர்கள் மாறிவிட்டனர்.
குறிப்பாக, கடந்தாண்டு அதிருப்தி எழுந்ததையடுத்து புபேந்திரபாய் படேலுக்கு குஜராத் முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த முறை, ஆம் ஆத்மி கட்சி கடும் சவால் அளிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.