"கேரளாவில் கணக்கை தொடங்கியாச்சு.. தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
தோல்வி அடைவதில் காங்கிரஸ் உலக சாதனை படைத்து வருவதாகவும் ஆனால், பாஜக கேரளாவில் கணக்கை தொடங்கிவிட்டதாகவும் தமிழ்நாட்டில் வாக்கு வங்கியை அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி இன்று பதில் அளித்தார். அப்போது, காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், "1984 தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் ஒருமுறை கூட 250க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றவில்லை. தோல்வி அடைவதில் காங்கிரஸ் உலக சாதனை படைத்து வருகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "கேரளாவில் தனது கணக்கை பாஜக தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானாவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்" என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, காங்கிரஸும் அதை சுற்றியிருந்த அமைப்புகள்தான் நாட்டின் முன் மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதன் ஒவ்வொரு சதிக்கும் அதன் சொந்த மொழியில் பதில் அளிக்கப்படும். தேச விரோதச் சதிகளை நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று அந்த அமைப்புகளுக்கு நான் எச்சரிக்க விரும்புகிறேன்" என்றார்.
நீட் முறைகேடு தொடர்பாக பதில் அளித்த பிரதமர், "இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதில் அரசு தீவிரம் காட்டி வருவதாகவும், போர்க்கால அடிப்படையில் நமது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு ஒன்றன் பின் ஒன்றாக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்பதை நாட்டின் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும், நாட்டின் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் கூறி கொள்கிறேன்.
இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை விட்டுவைக்கவே மாட்டோம். நீட் விவகாரத்தில் நாடு முழுவதும் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஏற்கனவே கடுமையான சட்டத்தை இயற்றியுள்ளது. தேர்வு நடத்தும் முழு அமைப்பையும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.
ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்த பிரதமர், "ஞானம் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். 'பாலக் புத்தி'க்கும் ஞானம் கிடைக்கும் என்று நம்புகிறேன். உண்மையின் குரலை யாராலும் நசுக்க முடியாது. விரிவாக விளக்கமளிக்க எனக்கு அவகாசம் வழங்கிய ஜனாதிபதியின் உரைக்கும் உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சத்தியத்தை இப்படி அடக்க முடியாது. இன்று சத்தியத்தின் சக்தியை அனுபவித்து வாழ்ந்து வருகிறேன்" என்றார்.