புதிய நாடாளுமன்ற கட்டட பணிக்கு தடைவிதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்ட்ரல் விஸ்டா திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. அத்துடன், அத்தியாவசியமானது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டட பணிக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று நேரத்தில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு தடைவிதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்ட்ரல் விஸ்டா திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. அத்துடன், அத்தியாவசியமானதும் கூட, எனவே, புதிய நாடாளுமன்றத்தை உள்ளடக்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு தடையில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. மேலும். பொதுநல நோக்கத்துடன் மனுதாரர் வழக்கு தொடரவில்லை. உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளார் என்று கூறி, மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ராஜ்பாத் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த சென்ட்ரல் விஸ்டா கட்டட பணிகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கொரோனா காலத்தில் இந்த நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு செலவு செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும் மத்திய அரசு இந்தக் கட்டிடத்தை கட்டும் பணியில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
முன்னதாக சென்ட்ரல் விஸ்டா கட்டட பணிகள் நடைபெறும் இடத்தில் யாருக்கும் நிழற்படம் எடுக்க அனுமதி இல்லை என்று மத்திய பொதுப்பணித்துறை ஒரு அறிவிப்பு பலகையை வைத்தது. மேலும் கட்டட பணிகள் நடைபெறும் இடத்திற்குள் அனுமதி இல்லாமல் யாரும் செல்லக் கூடாது என்று அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆட்சியும் அதிகாரமும் : இது இருவரின் கதை
ஏனென்றால் சில தினங்களுக்கு முன்பு ராஜ்பாத் பகுதியில் இந்த கட்டிடத்திற்காக 100 ஆண்டுகள் பழமையான ஜாமுன் மரங்கள் பல வெட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அத்துடன் அது தொடர்பாக நிழற்படங்களும் வெளியிடப்பட்டன. இதற்கு பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பலரும் தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான கருத்துகளை பதிவிட்டிருந்தார். அதில், "சென்ட்ரல் விஸ்டா கட்டடம் தொடர்பாக வரும் பொய்யான படங்கள் மற்றும் வதந்திகளை நம்பாதீர்கள். எந்த ஜாமுன் மரங்களும் வெட்டப்படவில்லை. ஒரு சில மரங்கள் வேறு இடத்தில் மீண்டும் நட்டி வைக்கப்படும். இந்தத் திட்டத்திற்கு பிறகு அப்பகுதியில் மரங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்தப் பகுதியில் நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும்"எனத் தெரிவித்தார்.
புதிய நாடாளுமன்ற கட்டடப் பணிகளை போட்டோ எடுக்க அனுமதி மறுப்பு
இந்தப் புதிய சென்ட்ரல் விஸ்டா பணிகளை ஷாபூர்ஜி பல்லோன்ஜி நிறுவனம் செய்து வருகிறது. இந்நிறுவனம் 477 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஏற்கெனவே கடந்த செப்டம்பர் மாதம் சென்டர்ல் விஸ்டா திட்டத்திலுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்ட டாட்டா குழுமம் ஒப்பந்தம் ஆனது. இந்தத் திட்டத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மட்டும் வரும் 2022ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.