Parliament Security Breach : நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம்.. மூளையாக செயல்பட்ட லலித்தை 7 நாள் காவலில் எடுத்த காவல்துறை
நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் நுழைந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட லலித் ஜா, தலைமறைவாக இருந்து வந்த நிலையில், நேற்று இரவு டெல்லி காவல்துறையிடம் சரண் அடைந்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு விவகாரங்கள் காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடரும் மழைக்காலக் கூட்டத்தொடரும் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த கூட்டத்தொடரில் சர்ச்சை எதுவும் வெடிக்காமல் சுமூகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் நுழைந்த விவகாரம்:
ஆனால், நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் (டிசம்பர் 13ஆம் தேதி), மதியம் 1 மணியளவில் நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்த இரு இளைஞர்கள் திடீரென மக்களவைக்குள் குதித்தனர். தங்களின் கைகளில் இருந்த மர்ம பொருள்களை அந்த இளைஞர்கள் வீசியதால் அங்கு புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இதனால் அங்கிருந்த எம்பிக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். பரபரப்பான சூழலில், இருக்கைகள் வழியே சபாநாயகர் இருக்கையை நோக்கி செல்ல முயன்ற அவர்களை எம்பிக்கள் சிலர் பிடித்து சரமாரியாக தாக்கி பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து நாடாளுமன்றத்தின் வெளியே இரு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு ஒரு வார காலம் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டது. இதனிடையே நாடாளுமன்றத்தில் அத்துமீறி இளைஞர்கள் நுழைந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது.
மூளையாக செயல்பட்ட லலித் ஜா:
நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் நுழைந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட லலித் ஜா, தலைமறைவாக இருந்து வந்த நிலையில், நேற்று இரவு டெல்லி காவல்துறையிடம் சரண் அடைந்தார். இச்சூழலில், அவரை 7 நாள்களுக்கு எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரான அரசு வழக்கறிஞர் அகந்த் பிரதாப் சிங், "சதி திட்டம் தீட்டியதை குற்றம்சாட்டப்பட்ட லலித் ஜா ஒப்பு கொண்டார். ஆதாரங்களை சேகரிக்க லலித் ஜாவை பல்வேறு மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சதியை வெளிக்கொணர அவரது தொலைபேசிகளை பறிமுதல் செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
இதை அடுத்து, ஜாவை டெல்லி காவல்துறையின் காவலில் வைக்க சிறப்பு நீதிபதி ஹர்தீப் கவுர் உத்தரவிட்டார், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மற்ற நால்வர், மனோரஞ்சன், சாகர் சர்மா, நீலம் ஆசாத் மற்றும் அமோல் ஷிண்டே என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடுப்பு சட்டம் (உபா) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பாட்டியாலா ஹவுஸில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஹர்தீப் கவுர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுக்கும் ஏழு நாட்களுக்கு போலீஸ் காவல் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என நேற்றைய தினம் முழக்கமிட்ட திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை திரும்ப பெற வலியுறுத்தி இன்று எம்.பி.,க்கள் முழக்கத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் 2 மணி ஒத்திவைக்கப்பட்டது. இப்படியான நிலையில் 2 மணிக்கு மீண்டும் அவை நேரம் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் முழக்கத்தில் ஈடுபட்டனர். இதனால் அவை இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.