Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?
ஆர்.சி.பி. அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள டிம் டேவிட் பிக் பாஷ் லீக் தொடரில் 38 பந்துகளில் 68 ரன்களை குவித்து ஹோபர்ட் அணியை வெற்றி பெற வைத்தார்.

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போல ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் கிரிக்கெட் தொடர் மிகவும் பிரபலம் ஆகும். இந்த தொடரில் இன்று நடந்த போட்டியில் ஹோபர்ட் ஹர்ரிகேன்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் மோதின.
ஒரு சிக்ஸ் கூட அடிக்காத சிட்னி தண்டர்ஸ்:
இதில், முதலில் களமிறங்கிய சிட்னி தண்டர்ஸ் அணியின் தொடக்க வீரர் சாம் கோன்ஸ்டஸ் 4 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த மேத்யூ ஹில்கேஸ் 9 ரன்னில் அவுட்டாக, அடுத்தடுத்து வந்த வீரர்கள் ஒத்துழைப்பு தர மறுமுனையில் கேப்டன் வார்னர் பட்டாசாய் வெடித்தார். அவரது அபாரமான பேட்டிங்கால் ஹோபர்ட் அணிக்கு சவாலான இலக்கை சிட்னி அணி நிர்ணயித்தது.
வார்னர் தனி ஆளாக போராடி 66 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 88 ரன்கள் எடுத்தார். சிட்னி அணி தரப்பில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கப்படவில்லை. 20 ஓவர்களில் 164 ரன்களை ஹோபர்ட் அணி எடுத்தது. இதையடுத்து, ஹோபர்ட் அணி இலக்கை நோக்கி களமிறங்கியது.
ரன் மழை பொழிந்த டிம் டேவிட்:
சிட்னி அணிக்கு மிட்செல் ஓவன், மேத்யூ வேட் அதிரடி தொடக்கம் அளித்தனர். ஆனாலும், மிட்செல் ஓவன் 6 பந்தில் 13 ரன்கள், வேட் 5 பந்தில் 13 ரன் எடுத்து அவுட்டாகினர். அடுத்து வந்த சார்லி வாகிம் 16 ரன்களில் அவுட்டானார். இதனால், 59 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சிட்னி அணி தத்தளித்தது.
அப்போது, ஹோபர்ட் அணிக்காக களமிறங்கினார் டிம் டேவிட். களமிறங்கியது முதலே பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறக்கவிட்டார். இதனால், ஆட்டம் ஹோபர்ட் அணியின் கட்டுப்பாட்டில் வந்தது, மறுமுனையில் டிம் டேவிட்டிற்கு ஒத்துழைப்பு தந்த நிகில் 29 ரன்களில் அவுட்டானாலும், டிம் டேவிட் ரன் மழை பொழிந்தார்.
ஆர்.சி.பி. வீரர்:
டிம் டேவிட்டின் அபார பேட்டிங்கால் 6 ஓவர்களில் 59 ரன்கள் எடுத்திருந்த ஹோபர்ட் அணி, 16.5 ஓவர்களில் 165 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. 38 பந்துகளில் 4 பவுண்டரி 6 சிக்ஸருடன் 68 ரன் குவித்து டிம் டேவிட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டிம் டேவிட்டை வரும் ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி. அணி தங்களுக்காக ஏலத்தில் எடுத்துள்ளது. இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லாத ஆர்.சி.பி. அணி இந்த முறை ஏலத்தில் எடுத்துள்ள சால்ட், ஜேக்கப் பெத்தேல், லிவிங்ஸ்டன், டிம் டேவிட் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

