Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடப் போவது யார்? என்று நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காரணமாக தமிழ்நாட்டின் ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்ய வரும் 17ம் தேதியே கடைசி நாள் ஆகும்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் யார் போட்டி?
தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட்ட இந்த தொகுதியில் ஏற்கனவே நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரசுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா? அல்லது தி.மு.க.வே நேரடியாக களமிறங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இடைத்தேர்தலுக்கு முழுமையாக ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், இதுவரை தி.மு.க. கூட்டணி தரப்பில் களமிறங்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் நாளை தி.மு.க. கூட்டணியில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கப்போவது யார்? என்ற அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சூடுபிடிக்கும் அரசியல் களம்:
வேட்புமனுத்தாக்கல் முடிவடைய இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர் யார்? என்ற அறிவிப்பும் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நடக்கும் இடைத்தேர்தல் என்பதால் இந்த தேர்தல் தி.மு.க.விற்கு மிகவும் முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது. அடுத்தாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தங்களது செல்வாக்கை நிரூபிக்கும் தேர்தலாக இந்த தேர்தல் தி.மு.க.விற்கு மாறியுள்ளது.
இந்த தேர்தலில் புதிய அரசியல் கட்சியான விஜய்யின் தவெக போட்டியிடாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க.வும் போட்டியிடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தி.மு.க.வின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில், இருப்பினும் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தி.மு.க. முனைப்பு காட்டும்.
8ம் தேதி ரிசல்ட்:
அதேசமயம், இன்னும் ஓராண்டு மட்டுமே இந்த தொகுதியில் வெற்றி பெறும் உறுப்பினருக்கு பதவிக்காலம் இருக்கும் என்பதால் அடுத்தாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலிலும் அதே நபருக்கு மீண்டும் போட்டியிட தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் வரும் 8ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.