Pahalgam Attack: வாய மூடுங்கையா..! தீவிரவாதிகளை விட மோசமான மதவெறியர்கள் - கேள்விகள் நியாயமா?
Pahalgam Terror Attack: காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை மையப்படுத்தி சமூக வலைதளங்களில், இஸ்லாமியர்களுக்கு எதிராக சிலர் வெறுப்பை பரப்பி வருகின்றனர்.

Pahalgam Kashmir: காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த 28 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாத தாக்குதல்:
காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில், சுற்றுலாபயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய கண்டுமூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கோடை வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள காஷ்மீரில் தஞ்சமடைந்தவர்களின் உயிர்களை, தீவிரவாதிகளின் தோட்டாக்கள் பறித்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கி எடுத்துள்ளது. உயிரிழந்தவர்களிலும், காயமடைந்தவர்களிலும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இருப்பார்களோ என, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பதற்றத்தில் உள்ளனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே சோகத்தில் மூழ்கடித்துள்ள சூழலில் தான், ஒரு தரப்பினர் தீவிரவாத தாக்குதலை ஒரு மதத்திற்கு எதிராக திசைதிருப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளனர்.
இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்மம்:
காஷ்மீர் தாக்குதலிற்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என்பது போல் சமூக வலைதளங்களில் தீவிரமாக பக்கம் பக்கமாக ரைட்-அப்களை எழுத தொடங்கியுள்ளனர். இவர்கள் தான் உள்ளூரில் மாமன் - மச்சானாக பழகிக் கொள்வதாக பிதற்றுகின்றனர், ஆனால் நீ இந்துவா, இஸ்லாமா என கேட்டு கேட்டு சுட்டுக் கொன்றுள்ளனர் என குற்றம்சாட்ட தொடங்கியுள்ளனர். மேலும், ”சுட்டுக் கொல்வதற்கு முன் ஆடைகளை கழற்றி அவர்களது மதத்தை உறுதி செய்த பிறகே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும்” எழுதி, இஸ்லாமிய சமூகத்தின் மீது வன்மத்தை கொட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் அதிகாரப்பூர்வ தகவல்கள் என எதுவுமே இல்லை என்றாலும், அவற்றை சகட்டுமேனிக்கு அடுக்கி வருகின்றனர். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களும் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் என்பது போல எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இன்றி கண்மூடித்தனமாக பேசி வருகின்றனர்.
இந்துக்களின் மீதான தாக்குதல்?
தாக்குதலில் உயிரிழந்த 28பேரில் 25 பேர் இந்துக்கள். மேலும் ஒரு இஸ்லாமியரும் அடங்குவர். ஆனால், ”பஹல்காம் தாக்குதல் இந்துக்களுக்கு எதிரானது, இந்திய நாட்டில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை, எதிர்க்கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக மட்டுமே செயல்பட்டு, நாட்டுக்கு எதிராக இயங்குகின்றன” என்றெல்லாம் சிலர் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர். ஆனால், உயிரிழந்தவர்கள் அனைவருமே இந்தியர்கள் என்ற எண்ணமே உங்களுக்கு வராதா? மதத்தின் அடிப்படையில் தான் இறந்தவர்கள் எல்லாம் அடையாளம் காணப்படுவார்களா? கடந்த கால தீவிரவாத தாக்குதலின்போது, இறந்தவர்கள் அனைவரும் இந்தியர்களாகவே அடையாளம் காணப்பட்டனர். ஆனால், இன்று ஊடகங்கள் கூட பிணங்களை மதங்களை கொண்டு அடையாளம் காட்ட தொடங்கியிருப்பது வேதனையின் உச்சம்.
மதவெறியர்களுக்கு கேள்வி..!
குறிப்பிட்ட மதத்தினரை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பும் நியாயஸ்தர்களே, தாக்குதலை தடுக்க வேண்டிய ராணுவம் என்ன ஆனது? பாதுகாப்பு படையினர் கோட்டை விட்டது எப்படி? உளவுத்துறை தூங்கிவிட்டதா? என்ற கேள்விகளை எல்லாம் எழுப்பமாட்டீர்களா? எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்யாமல் போனது யாரருடைய தவறு? இதுபோன்ற நியாயமான கேள்விகளை எல்லாம் அரசை நோக்கி கேட்காமல், இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரானதாக மாற்ற முயல்வது எல்லாம் நியாயமா? ”வேற்றுமையில் ஒற்றுமை, மதச்சார்பற்ற நாடு, இந்தியர்கள் அனைவரும் எனது சகோதர, சமோதரிகள்” என பயின்றது எல்லாம் ஏட்டுக்கல்வியுடன் காட்டுக்கு சென்றுவிட்டது போல.
வன்முறைக்கு ஏது மதம்?
தீவிரவாதம் மதமற்றது, அறிவற்றது, ஈவு இரக்கமற்றது, மனித தன்மையற்றது, பரிதாபமற்றது, பார்வையற்றது. அதனை எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கானது மட்டுமே என்று யாராலும் ஒதுக்கமுடியாது. காரணம், இந்தியா மதங்களால் நிகழ்ந்த பல வன்முறைகளை கண்டுள்ளது. எனவே, தீவிரவாத குணம் ஒரு மதத்திற்கானது மட்டுமே என்ற கண்மூடித்தனமான குற்றச்சாட்டை, போகிற போக்கில் கொட்டிச் செல்வதை நிறுத்துங்கள். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நாடு மதரீதியில் பிளவுபடுவதற்கு நீங்களும் காரணமாகிவிடாதீர்கள்.
அரசியல் ஆதாயம்
இந்தியா எப்போதும் மதத்திற்கு அப்பாற்பட்டது. அப்படி இருப்பதே நமது அடையாளம். அதனடிப்படையில் தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக நாம் உருவெடுத்துள்ளோம். பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்களின் உழைப்பால் தான் நமது நாடு இன்று சர்வதேச அளவில் முன்னேற்றம் கண்டு வருகிறது. எனவே, யாரோ ஒருவரின் அரசியல் லாபத்தை, இறந்தவர்களின் ரத்தத்தில் தேடாதீர்கள். ரத்தத்தில் மதமில்லை, மனிதர்களின் மனதிலேயே மிருகங்களுக்குள் எழும் மதம் ஊறிப்போயுள்ளது.

