Kerala Train Fire: ரயிலில் பயணிகள் மீது தீ வைக்கப்பட்ட விவகாரம்.. உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் கைது
கேரள ரயிலில் பயணிகள் மீது தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள ரயிலில் பயணிகள் மீது தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா ரயில் நிலையத்தில் இருந்து கண்ணூர் வரை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை, சனிக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் இயக்கப்பட்டு வரும் இந்த ரயில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி மதியம் 2.55 மணியளவில் வழக்கம்போல ஆலப்புழாவில் இருந்து புறப்பட்டது. இந்த ரயிலானது இரவு 9.50 மணியளவில் கோழிக்கோடு ரயில் நிலையத்திற்கு வந்தது.
அப்போது டி1 பெட்டியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஏறியுள்ளார். ரயிலானது கோழிக்கோடு மற்றும் க்யூலாண்டி ரயில் நிலையங்களுக்கு நடுவே உள்ள கோரபுழா ரயில்வே பாலத்தில் சென்ற போது அந்த நபர் பயணிகள் மீது பெட்ரோல் போன்ற திரவம் ஒன்றை தெளித்து தீ வைத்துள்ளார். பின்னர் அவசர சங்கிலியை இழுத்து தப்பிச் சென்றான். இந்த செயலை சற்றும் எதிர்பாராத பயணிகள் ரயில் நின்றவுடன் பதறிப்போய் கீழே இறங்கினர்.
உடனடியாக தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் காயமடைந்த 9 பேரை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது பயணிகள் பட்டியலை ஆய்வு செய்தனர். அதில் 3 பேர் காணாமல் போனது தெரிய வந்தது. போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஒரு குழந்தை, ஆண், பெண் ஆகிய 3 பேரின் உடல்கள் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது.
அதேசமயம் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில், இலத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கேட்பாரற்று பை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் பெட்ரோல் பாட்டில், டைரி, துண்டு பிரசுரம், மொபைல் ஃபோன், துணி ஆகியவை இருந்தது தெரிய வந்தது. அதில் கன்னியாகுமரி, கொல்லம் உள்ளிட்ட ரயில் நிலையங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டிருந்தாக தகவல் வெளியானது. இதனால் இந்த சம்பவம் பயங்கரவாதிகளின் சதிச் செயலா என்ற கேள்வி எழுந்தது.
குற்றவாளி தப்பிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டு, மாதிரி வரைபடமும் வெளியிடப்பட்டது. தீவிர விசாரணை நடந்து வந்த நிலையில் கேரளா புலனாய்வுக் குழு குற்றவாளியை தேடி நொய்டா சென்றது. இந்நிலையில் ரயிலில் பயணிகள் மீது தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் அங்குள்ள புலந்த்சாகர் மாவட்டத்தில் ஷாரூக் சைபி புலந்த்சாகர் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.